நாட்டை அவமானப்படுத்தாதீர்: குப்பைகளைக் கொட்டுவது குறித்து மலேசிய அமைச்சர் எச்சரிக்கை

1 mins read
3d4b9de3-8f99-4126-bf5c-9bd98e9a1c9e
கோலாலம்பூரில் இருக்கும் புக்கிட் பிந்தாங்கில் உள்ள சாலைகளில் குப்பைகள் சிதறிக்கிடப்பது போன்ற புகைப்படங்கள். - படங்கள்: எக்ஸ் தளம்/ இங் கோர் மிங்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பொது இடங்களில் குப்பை கொட்டுவது ஒரு பரவலான பிரச்சினையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்நாட்டு வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சர் இங்கோர் மிங் கூறினார்.

இதுகுறித்து டிசம்பர் 25ஆம் தேதி எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “மலேசியாவை அவமானப்படுத்த வேண்டாம். தயவுசெய்து பொது இடங்களிலும் நகர மையங்களிலும் குப்பை போடுவதை உடனடியாக நிறுத்துங்கள். நாம் ஏற்கெனவே 21ஆம் நுற்றாண்டில் வாழ்கிறோம். பொது இடங்களில் குப்பைகளை வீசுவதற்கு யாருக்கும் எந்தக் காரணமும் இருக்கமுடியாது,” என்று அவர் சாடினார்.

மேலும், மலேசியர்களிடம் இத்தகைய பொறுப்பற்ற நடத்தையைப் பார்ப்பது மிகவும் வெட்கக்கேடானது எனத் தெரிவித்த அவர், நாங்கள் சட்டத்தை அமல்படுத்தும்போது எங்களைக் குறை கூறாதீர்கள் என மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் குப்பை வீசுவோரை எச்சரித்தார்.

அத்துடன், சாலைகளில் குப்பைகள் சிதறிக்கிடப்பது போன்ற புகைப்படங்கள் சிலவற்றையும் தனது பதிவுடன் அவர் பகிர்ந்தார்.

கோலாலம்பூரில் இருக்கும் புக்கிட் பிந்தாங்கில் உள்ள சாலைகளில் எடுக்கப்பட்டவைபோல் அவை தோன்றுகின்றன.

மலேசியா முன்னேற்றமடைந்த நாடாக மாறும் பாதையில் முன்னேறி வருகிறது என்றும் 2026 ஆம் ஆண்டில் ‘ விசிட் மலேசியா 2026’ விளம்பர பிரசாரத்தை நடத்த உள்ளது என்றும் தமது அறிக்கையில் திரு இங் குறிப்பிட்டார்.

இத்தகைய சூழலில், பொறுப்பற்ற அணுகுமுறைகள் நாட்டு மக்களிடமும் சுற்றுப் பயணிகளிடமும் நாட்டின் மதிப்பைக் கெடுக்கும் என அவர் அதில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்