பெய்ஜிங்: தைவான் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட மேற்கொள்ளும் முயற்சிகள் முறியடிக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.
தைவானுக்கு அருகே உள்ள தீவில் ஏவுகணைகளை நிறுத்திவைக்கத் திட்டமிருப்பதாக ஜப்பான் அண்மையில் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சீனாவின் எச்சரிக்கை வந்துள்ளது.
“தேசிய அரசுரிமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் தற்காப்பதற்குரிய மன உறுதியும் வலுவான ஆற்றலும் எங்களிடம் உள்ளன,” என்று தைவானிய விவகாரங்களுக்கான சீன அலுவலகத்தின் பேச்சாளர் பெங் சிங்கென் கூறினார்.
“அந்நியத் தலையீட்டைத் தவிடுபொடியாக்குவோம்,” என்றார் அவர்.
தைவானைத் தனது சொந்தப் பகுதியாகக் கருதுகிறது பெய்ஜிங். அதனைத் தனது கட்டுக்குள் கொண்டுவரப் படைபலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீனா இதற்கு முன்னர் பல முறை தெரிவித்துள்ளது.
தைவானிய அரசாங்கம், அதன் மீது பெய்ஜிங் அரசுரிமை கொண்டாடுவதை நிராகரிக்கிறது. தைவானிய மக்களே அவர்களின் எதிர்காலத்தை முடிவுசெய்ய வேண்டும் என்று அது கூறுகிறது.
“சீனாவுக்குச் சொந்தமான தைவானிய வட்டாரத்தில், தாக்கக்கூடிய ஆயுதங்களை ஜப்பான் நிறுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அது வட்டாரத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. ராணுவ மோதல் ஏற்படவும் அது தூண்டுதலாய் அமைகிறது,” என்று சீனப் பேச்சாளர் சொன்னார்.

