பிரான்ஸ் அதிபர் காலணியுடன் ஆலயத்திற்குச் சென்ற விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாமென வேண்டுகோள்

பிரான்ஸ் அதிபர் காலணியுடன் ஆலயத்திற்குச் சென்ற விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாமென வேண்டுகோள்

படம்: பெர்னாமா

20 Nov 2026 - 12:55 pm

1 mins read

கோலாலம்பூர்: அண்மையில், சிலாங்கூர், பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திற்கும் கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திற்கும், பிரான்ஸ் அதிபர் இமெனுவல் மெக்ரோன் திடீர் வருகை அளித்திருந்தார்.

இந்நிலையில், அவர் உட்பட அவர்தம் குழுவினர், அவ்வளாகத்திற்குள் காலணிகளுடன் சென்ற விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என கோலாலம்பூர் மஹா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் ஆர். நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றும் அவர்களுக்கு, இந்து ஆலயங்களில் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்கள் குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் இணைந்து மேற்கொண்ட வருகையின்போது திரு மெக்ரோன், காலணிகளை அணிந்திருந்த விவகாரம் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்ததுடன், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

அந்த வருகை முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒன்று என்றும் ஆலய நிர்வாகத்தினருக்கூட அது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் திரு நடராஜா விளக்கமளித்தார்.

இந்நிலையில், தாம் உட்பட ஆலய நிர்வாகத்தினர் எவரும் அப்போது அங்கு இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, இவ்விவகாரத்தைச் சமய உணர்வுகளுடன் தொடர்புபடுத்தி சர்ச்சையாக்காமல், கலாசார வேறுபாடுகளையும் சூழ்நிலையையும் கருத்தில்கொண்டு அணுக வேண்டும் என்று திரு நடராஜா கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்