சிரம்பான் - மலேசியா அமைச்சரவையிலிருந்து பதவி விலகிய இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிக்கு அழுத்தம் தரவேண்டாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீர ஆலோசித்த பின் நாட்டுக்கு எது சிறந்தது என்ற அடிப்படையில் பிரதமர் அன்வார் முடிவெடுப்பார் என்ற் திரு லோக் குறிப்பிட்டார்.
“அமைச்சர்களை நியமிப்பது பிரதமரின் அதிகாரத்துக்கு உட்பட்டது, அவரது தனியுரிமை. இந்த விவகாரத்தில் அவர் ஞானமாக நடந்துகொள்வதோடு காலியான இடங்களை நிரப்புவதில் அம்சங்களைக் கருத்தில்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதுவரை காலி இடம் ஏதுமில்லை உல்லை,” என்று திரு லோக் விவரித்தார்.
பிரதமர் சொன்னதுபோல இரண்டு அமைச்சர்களின் விடுப்பைதான் அவர் அனுமதித்தார் என்றும் இப்போதும் அவர்கள் அமைச்சர் பதவிகளில் உள்ளனர் என்றும் திரு லோக் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
2025 பிகேஆர் கட்சித் தேர்தலில் தோற்றதை அடுத்து பொருளியல் துறை அமைச்சர் ரஃபிஸி ராம்லியும் இயற்கை வளங்கள், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமதும் ஜூன் 17ஆம் தேதியும் ஜூலை 4ஆம் தேதியும் பதவி விலகுவதாகக் கூறப்பட்டது.
அமைச்சர்கள் இருவரிடமிருந்தும் விடுப்பு விண்ணப்பத்தோடு அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறும் கடிதங்களையும் பெற்றுக்கொண்டதாகப் பிரதமர் அலுவகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
திரு அன்வார் அவர்களின் விடுப்பு விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளித்ததை உறுதிப்படுத்திய அறிக்கை, இதில் மேற்கொண்டு எடுக்கும் முடிவுகளைப் பிரதமர் அறிவிப்பார் என்றது.
சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான திரு லோக், ஜனநாயகச் செயல் கட்சி எந்தக் கட்சியின் விவகாரங்களிலும் தலையிடாது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“அம்னோவிலிருந்து திரு அப்துல் அஸிஸ் விலகி பிகேஆர் கட்சியில் சேரவிரும்பும் விவகாரத்திலும் எங்கள் கட்சி தலையிடாது. எனவே, என் கட்சி தொடர்பில்லாத விவகாரங்களில் நான் கருத்துரைக்க மாட்டேன்,” என்று திரு லோக் குறிப்பிட்டார்.
டிஏபி கட்சி உறுப்பினர்களுக்கும் அது தெரியும் என்ற அவர், அது குறித்து அவர்கள் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை என்றார்.

