பெந்தோங்: மலேசியாவில் நீடிக்கும் மொழிச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவுறுத்தியுள்ளார்.
மாறாக, நாட்டின் பிள்ளைகளுக்காக இன்னும் போட்டித்தன்மைமிக்க, ஒற்றுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.
அரசாங்கத்தின் பன்மொழிக் கல்வி அணுகுமுறை, தேசிய, அதிகாரத்துவ மொழியான மலாய் மொழியைக் கீழறுப்பதற்கான நோக்கமுடையதன்று எனக் கூறிய அவர், மாறாக தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி பல மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்பை அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்றார்.
அனைத்துலகச் சவால்களை எதிர்கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவதற்கான திறனைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம் என்று திரு அன்வார் கருதுகிறார்.
நாட்டின் தேசிய அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் போட்டித்தன்மையை எதிர்கொள்ள இளைய தலைமுறையினரின் திறனை வலுப்படுத்தவும் பல மொழி பேசும் திறன் அவசியம் என்றார் அவர்.
“இனங்களுக்கு இடையே மொழி தொடர்பான சர்ச்சை வேண்டாம். வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி பிள்ளைகளுக்கான சிறந்த எதிர்காலத்தை உறுதிசெய்வதற்குத்தான் நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும்,” என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.
மலேசியாவுக்குள் மட்டுமல்லாமல் ஆசியாவிலும் அனைத்துலக அளவிலும் போட்டி போட்டு செயல்படக்கூடிய திறனைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற திரு அன்வார், மொழி, அறிவியல், கணிதம், மின்னிலக்கத் திறன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் பள்ளிப் பருவத்திலிருந்தே பிள்ளைகள் கைதேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றார்.
கல்வித் தரத்தை மேம்படுத்துவது நாடு கவனம் செலுத்தவேண்டிய முக்கிய விவகாரங்களில் அடங்கும் என்றும் பள்ளி மேம்பாடுகள், ஆசிரியர் பயிற்சி, போதுமான வசதிகளைக் கட்டமைத்தல் ஆகியவற்றில் அனைத்துக் கட்சிகளும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் திரு அன்வார் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கும் கூடுதல் வசதிகளுக்கும் 13.5 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்க அவர் ஒப்புதல் அளித்தார்.
முதற்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்காக 300,000 ரிங்கிட் தொகைக்குத் திரு அன்வார் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

