தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகப்போவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்பாரா வகையில் அவர் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று குரல் கொடுக்கும் இயக்கம் தலைதூக்கியுள்ளது. இந்த வாரம் சூடுபிடித்துவரும் அந்த இயக்கத்தில் திரு இஷிபாவின் அரசியல் வைரிகள் சிலரும் அடங்குவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜப்பானிய மேலவைத் தேர்தலில் திரு இஷிபாவின் ஆளும் கூட்டணி பெரும்பான்மை வாக்குகளைப் பெறத் தவறியது. சில மாதங்களுக்கு முன்பு அக்கூட்டணி கீழவைத் தேர்தலிலும் ஏமாற்றத்தைச் சந்தித்தது.
இந்நிலையில், திரு இஷிபா பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் 64 வயது சானே டக்காய்ச்சி கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் போட்டியில் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்று வரலாறு படைக்கக்கூடும்.
திருவாட்டி டக்காய்ச்சி, கடுமையான தேசியவாதக் கொள்கைகளைக் கொண்டவர். அத்தகைய ஒருவர் ஆட்சிக்கு வர விரும்பாத பலர், நடுநிலைக் கொள்கைகளைக் கொண்ட திரு இஷிபா தொடர்ந்து பிரதமர் பதவி வகிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.
“#Ishiba Don’t quit” என்ற ஹேஷ்டேக் (hashtag) தலைப்பைக் கொண்டு பதவி விலகவேண்டாம் என்று பலர் திரு இஷிபாவைக் கேட்டுக்கொண்டுவருவதகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலரும் வேண்டுகோள் விடுப்பவர்களில் அடங்குவர்.