புத்ராஜெயா: சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடவும், மற்றவர்களை இழிவுபடுத்தவும் வேண்டாம் என்று மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் நாட்டு மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
இந்தச் செயல்கள் பிளவையும் பூசல்களையும் ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
சுல்தான் இப்ராகிம் தீவிரவாதத்திற்கு எதிராகவும் எச்சரித்தார். குறிப்பாக, இனம், சமயம் சார்ந்த விவகாரங்களை அவர் சுட்டினார்.
அவர் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற ‘மஅல் ஹிஜ்ரா’ கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசினார்.
சமூக ஊடகம் மூலம், கட்டுப்படுத்தமுடியாத அளவில் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும் நிலையில், இன்று பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய சவால்கள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
சமூக ஊடகத்தில் சமயம் சார்ந்த தகவல்களை நாடும்போது மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அவர்கள் பெறும் தகவல்கள் உண்மையானவையா, அதிகாரம் உள்ள மூலங்களிலிருந்து வருபவையா என்பதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றார் சுல்தான் இப்ராகிம்.
இஸ்லாம் தொடர்பாக திசை திருப்பக்கூடிய, தவறான தகவல்கள் வெளியிடப்படுவது குறித்து கவலை அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்தகாலத்தில் சமயக் கல்விக்காக பெரும்பாலும் பலர் புத்தகங்கள் வாசிப்பார்கள் அல்லது பள்ளிவாசல்களில் சமய வகுப்புகளுக்குச் செல்வார்கள்.
“இருப்பினும், இன்று சமூகத்தினர் சமயக் கற்றலுக்காக ‘உஸ்தாஸா ஃபேஸ்புக்’, ‘உஸ்தாஸ் டிக்டாக்’ போன்ற இணையத் தளங்களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.
சமூக ஊடகம் வழியாகப் பரவும் தவறான சமயத் தகவல்கள் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தக்கூடும் என்று சுல்தான் இப்ராகிம் வலியுறுத்தினார்.
திசைதிருப்பக்கூடிய தகவல்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை அதிகரித்து, சரியான கருத்துகளையும் தகவல்களையும் சமூகத்தினரிடம் கொண்டுசேர்க்க, சமயக் குறிப்பு நிலையம் ஒன்றை அமைக்குமாறு சுல்தான் இப்ராகிம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.


