உலகமயத்தையும் புத்தாக்க நடவடிக்கைகளையும் நீடித்து நிலைக்கச் செய்ய சிங்கப்பூரும் ஜெர்மனியும் இணைந்து பணியாற்றுவது அவசியம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
மேலும், தாராள வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்குப் பயனளிக்கும் புதிய பங்காளிகளை அந்த இரு நாடுகளும் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் திங்கட்கிழமை (ஜனவரி 27) நடைபெற்ற WELT பொருளியல் உச்சிநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரு ஹெங் பேசினார்.
இன்றைய உலகில் நாம் எதிர்நோக்கும் உலகமய சிக்கல், மின்னிலக்கமயம், மக்கள்தொகைப் பெருக்கம், கரிம நீக்கம் போன்றவற்றைச் சமாளிக்க உலக அளவிலும் சமூகங்களுக்கு உள்ளேயும் கருத்தொற்றுமைக்கான அவசரத் தேவை ஏற்பட்டு உள்ளது என்றார் அவர்.
அத்தகைய சவால்களைச் சமாளிக்கும் வகையிலான உலகளாவிய கருத்தொற்றுமை இதுவரை எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பெர்லின் பொருளியல் உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதல் ஆசிய-பசிபிக் தலைவர் திரு ஹெங் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆகப் பெரிய பொருளியல் நாடான ஜெர்மனியின் அரசாங்க, வர்த்தகத் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஒன்றுகூடும் நிகழ்வு அது.
தொடர்ந்து பேசிய திரு ஹெங், அமெரிக்கா, சீனா என்னும் உலகின் ஆகப் பெரிய இரு பொருளியல் நாடுகளுக்கும் இடையில் பெரிதளவு நம்பிக்கைக் குறைவும் உத்திபூர்வ போட்டித்தன்மையும் உள்ளதைக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“எனவே, நான் முன்னர் குறிப்பிட்ட சவால்களைச் சமாளிக்க உலகத் தலைமைத்துவம் தயாராவதற்கு மாறாக, பிளவுபட்ட, இருதுருவங்களாக மாறிவிட்ட விநியோகத் தொடர்களையும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் நாம் இப்போது சந்தித்து வருகிறோம்,” என்று திரு ஹெங் தெரிவித்தார்.
இந்நிலையில், இரு பெரிய அதிகார மையங்கள், ஒன்று மற்றொன்றின் கவலைகளைத் தீர்க்கவும் உத்திபூர்வ நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும் புதிய வழிவகைகளைக் கண்டறியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இடைப்பட்ட காலத்தில் உலகின் பிற நாடுகளும் வளர்ச்சியை முன்னெடுக்கவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும் நமது பூமியைக் காக்கவும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று திரு ஹெங் கேட்டுக்கொண்டார்.

