கோலாலம்பூர்: மலேசியாவின் நான்காம் பிரதமர் மகாதீர் முகமதின் முன்னாள் அரசாங்க இல்லம் பொதுமக்களுக்கு ஜூலை 10ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் தேசியக் காப்பகங்களின் மேற்பார்வையின்கீழ் ஜாலான் திரங்கானுவில் உள்ள பிரதமர் இல்லம், காலத்தால் அழியாத பல அரிய பொருள்களைக் கொண்டிருக்கிறது.
தேசியக் காப்பகங்களின் தலைமை இயக்குநர் ஜாஃபர் சிடெக் அப்துல் ரஹ்மான், 11வது மலேசியத் திட்டத்தின் கீழ் 12.76 மில்லியன் ரிங்கிட் செலவில் நடைபெற்ற மேம்பாட்டுப் பணிகள் எதிர்காலத் தலைமுறைக்காகக் கட்டடத்தைப் பாதுகாக்கும் என்றார்.
“குளிர்சாதனப் பெட்டிகள், மின்விளக்குக் கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கான கம்பிகளை மறுவடிவமைப்பது முதல் வளாகத்தைச் சுற்றியுள்ள தோட்டத்தைப் பண்படுத்துவது வரை முழுவீச்சில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன,” என்று திரு ஜாஃபர் இல்லத்தின் மறுதிறப்பு விழாவில் குறிப்பிட்டார்.
விரிவான பரமாரிப்பைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க இல்லம் இப்போது பொது காட்சிக்கூடமாக, அரும்பொருளகமாக, கல்விக்கான சுற்றுலா நிலையமாகத் திகழ்கிறது.
புதுபிக்கப்பட்ட அரும்பொருளக வளாகம் நாட்டின் வரலாறு, கலாசாரம், தலைவர்கள் ஆகியோருடன் மலேசியர்களை இணைக்க உதவும் என்றார் திரு ஜாஃபர்.
மலேசியாவின் சுரங்க கூட்டமைப்பின் ஒரு கட்டமாக இருந்த வளாகம் 1983 ஆகஸ்ட்டிலிருந்து 1999 அக்டோபர் வரை அரசாங்கத்தால் டாக்டர் மகாதீர், அவரது குடும்பத்தின் இல்லமாக மாற்றியமைக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட பங்களாவில் டாக்டர் மகாதீருக்குச் சொந்தமான 3,500க்கும் அதிகமான தனிப்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அன்றாட அறைகலன்கள், வாகனங்கள், ஆவணங்கள், காலணிகள், பாரம்பரிய மலாய் உடைகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
முன்னாள் பிரதமர் மகாதீர் இல்லத்தில் இருந்தபோது அங்கேயே அவருக்கென ஒரு தனி முடித்திருத்த அறையையும் வைத்திருந்தார்.
‘புரோட்டோன் 2020’ என்ற உரிமப் பலகையைக் கொண்ட டாக்டர் மகாதீரின் அதிகாரபூர்வமானப் புரோட்டோன் பெர்டானா காரும் பங்ளாவுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.