ஆஸ்திரேலியா மாநிலத்தில் கடுமையான துப்பாக்கிச் சட்டம்

2 mins read
62914523-930f-41a0-9622-f835b63ea3cd
போண்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பத்து வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்தனர். - படம்: ஏஎஃப்பி

சிட்னி: போண்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலத்தில் டிசம்பர் 24ஆம் தேதி புதிய துப்பாக்கிச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இதன்படி துப்பாக்கிகளின் உரிமைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும். பொது இடங்களில் பயங்கரவாத அடையாளங்களைக் காட்டுவது குற்றமாகும். ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான காவல்துறையின் அதிகாரம் கூடும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில்தான் பயங்கரவாதம் மற்றும் பிற சட்டத் திருத்தங்கள் அதிகாலையில் நிறைவேற்றப்பட்டன. பதினெட்டுக்கு எட்டு என்ற வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது.

முதல்வர் கிறிஸ் மின்ஸ், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் குடியிருப்பாளர்கள் மட்டுமல்ல, மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்யும் என்று உறுதியளித்தார்.

சென்ற டிசம்பர் 14ஆம் தேதி போண்டாய் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது தந்தையும் மகனும் சேர்ந்து, அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் 15 பேர் மாண்டனர், பலர் காயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் முப்பது ஆண்டுகளில் இல்லாத இந்தப் பயங்கரவாதத் தாக்குதலால் துப்பாக்கிச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

முன்னதாக டிசம்பர் 23ஆம் தேதி கீழவையில் மசோதா நிறைவேறியது.

புதிய சட்டத்தை ஆஸ்திரேலியாவின் மிகக் கடுமையானச் சட்டம் என்று குறிப்பிட்ட திரு மின்ஸ், பெரும்பாலான தனிநபர் துப்பாக்கி உரிமங்கள் நான்கு துப்பாக்கிகளாக வரம்பு விதிக்கப்படும், அதே சமயத்தில் விவசாயிகள் 10 துப்பாக்கிகள் வரை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

துப்பாக்கி உரிமங்கள் பெற்ற அனைவரும் துப்பாக்கி மன்றத்தின் உறுப்பினர்களாக இருப்பது கட்டாயமாகும். பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று மாதங்களுக்கு போராட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.

பொது இடங்களில் ஐஎஸ், ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத, போராளி அமைப்புகளின் கொடிகளையோ, அடையாளங்களையே காட்டுவது சட்டவிரோதமாகும். இதை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 22,000 ஆஸ்திரேலிய டாலர் (S$28,214) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்