டெஹ்ரான்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடனான வரைவு ஒப்பந்தத்தை டெஹ்ரான் பெற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வரைவு ஒப்பந்தத்தின்படி ஈரான் ஒரு மாதத்துக்குள் ஹோர்முஸ் நீரிணையை, போருக்கு முன்பு இருந்ததுபோல் திறந்துவிடவேண்டியிருக்கும்.
அதேபோல், அமெரிக்காவும் ஈரானுக்கு அருகே இருக்கும் அதன் படைகளை மீட்டுக்கொள்ளவேண்டியிருக்கும். அதோடு, தங்களின் கடற்படைகள் விதித்துள்ள போக்குவரத்து முடக்கத்தையும் அமெரிக்கா நிறுத்தவேண்டியிருக்கும்.
வரைவு ஒப்பந்தத்தில் ராணுவக் கப்பல்கள் சேர்க்கப்படமாட்டா. அத்துடன், ஒப்பந்தத்தின்படி ஈரானும் ஓமானும் இணைந்து ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கவனித்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாகாத ஒப்பந்தம்
ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதோடு, ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களைத் தீவிரமாகச் சரிபார்க்காமல் தங்கள் தரப்பு அதை ஏற்காது என்றது ஈரானிய அரசாங்கம்.
60 நாள்களுக்குள் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், அந்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தின் கட்டாயத் தீர்மானமாக அங்கீகரிக்கப்படலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போரிட்டதைத் தொடர்ந்து இருதரப்பும் மறைமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடங்கின. அதனையடுத்து இந்த வரைவு ஒப்பந்தம் தலைதூக்கியிருக்கிறது.
டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் வழிநடத்திவருகிறது.

