உடை விதிமீறல்: 21 பெண்களைக் கைதுசெய்தது தலிபான்

உடை விதிமீறல்: 21 பெண்களைக் கைதுசெய்தது தலிபான்

2 mins read
முகங்கள் தெரியும் வகையில் பெண்கள் பொதுவில் நடமாட முடியாது
b08253fa-0aba-40bf-977d-45e59b5b1e75
ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத் துணை அலுவலகம் தலிபானின் மனித உரிமைக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

காபுல்: ஆப்கானிஸ்தானின் மேற்கு மாவட்டங்களில் மாதர்களின் உடைகளுக்கான விதிமுறைகள் மீறப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி சிறுமிகள் உட்பட பல பெண்களை தலிபான் ஆட்சியாளர்கள் கைதுசெய்தனர்.

இதனையடுத்து, ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான துணை அலுவலகம் அனைவரையும் சமமாக நடத்தும்படி தலிபான் ஆட்சியாளர்களைக் கேட்டுக்கொண்டது.

மொத்தம் எத்தனை பெண்கள் கைதாகினர் என்பதை ஐநா அலுவலகம் தெரிவிக்கவில்லை. ஆயினும், உள்ளூர் ஊடகம் 21 பெண்கள் ஹெராட் மாநிலத்தில் கடந்த வாரம் தடுத்துவைக்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது.

ஊடகங்களின் கேள்விகளுக்குத் தலிபான் அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன்7) எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ஹெராட் மாநிலத்தில் உடைகளுக்கான விதிமுறைகளை மீறியதாகப் பெண்கள் கைதுசெய்யப்பட்டது மனித உரிமைகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை,” என ஆப்கானிஸ்தானின் ஐநா அலுவலகம் குறிப்பிட்டது.

“அனைத்து மக்களுக்கும் மனித உரிமைகள் பொதுவானதே. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆண்களும் பெண்களும் சட்டத்தின் முன்னாள் சமமானவர்கள் என்று ஆட்சி செய்யும் அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறோம்,” என்று ஐநா அமைப்பு தலிபானிடம் தெரிவித்துள்ளது.

பொதுவெளியில் நடமாடும் பெண்கள் அனைவரும் முறையான ஹிஜாப் அணிந்து செல்லவேண்டும் என்று கடந்த வாரம் தலிபான் ஆட்சியாளர்கள் விதிமுறைகளை வெளியிட்டிருந்தனர். அவ்வாறு அணியாதோர் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டது.

ஒப்பனை செய்துகொண்டு முகங்கள் தெரியும் வகையில் பொதுவில் நடமாடும் பெண்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த விதிமுறைகள் எச்சரித்திருந்தன.

அச்சமளிக்கும் ஐநா அறிக்கை

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு திடுக்கிடும் அறிக்கையை ஐநா அனைத்துலகக் குழந்தைகள் அவசரகால நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டது.

அதன்படி, பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தால் 2030ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டில் 25,000 ஆசிரியர்களையும் சுகாதார ஊழியர்களையும் இழக்க நேரிடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்