தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் பானப் பொட்டலங்களில் போதைப்பொருள் விற்பனை

1 mins read
5be13c7e-7c32-455f-b74b-bd3308d4b9f2
பறிமுதல் செய்யப்பட்ட ‘பானப் பொட்டலங்கள்’. - படம்: Polis Johor / ஃபேஸ்புக்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் மெத்தம்ஃபிட்டமின், கெட்டமின் (methamphetamine, ketamine) போன்ற போதைப்பொருள்களை பானங்களுக்கான சிறு பொட்டலங்களில் (sachets) வைத்து விற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய ‘பானப் பொட்டலங்கள்’ ஒவ்வொன்றையும் அந்தக் கும்பல்கள் 200லிருந்து (60 வெள்ளி) 300 ரிங்கிட் விலைக்கு விற்பதாக ஜோகூர் மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது. அப்பொட்டலங்களில் பலவகை போதைப்பொருள்கள் ஒன்றாகக் கலக்கப்படுவதாகவும் பார்ப்பதற்கு அவற்றுக்கும் உண்மையான பானப் பொட்டலங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் கூறியுள்ளார்.

இவ்வாண்டு இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ‘பானப் பொட்டலங்களில்’ சுமார் 426.9 கிலோகிராம் எடையிலும் 2,854 லிட்டர் அளவிலும் போதைப்பொருள்கள் இருந்ததாக திரு குமார் தெரிவித்தார்.

“குற்றக் கும்பல்கள் பொதுவாக சுவையூட்டப்பட்ட பானங்களுக்கான பொட்டலங்களை மறுபயனீடு செய்யும். காப்பி, சாக்லெட் பானங்களுக்கான பொட்டலங்களிலும் அவை போதைப்பொருள்களை மறைப்பதுண்டு,” என்று திங்கட்கிழமை (மார்ச் 10) ஜோகூர் காவல்துறைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு குமார் விளக்கினார்.

பொதுவாக கேளிக்கை கூடங்கள் போன்றவற்றில் மாற்றியமைக்கப்பட்ட ‘பானப் பொட்டலங்கள்’ விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்