துருக்கி அருகே கருங்கடலில் மூன்று கப்பல்கள்மீது ‘ட்ரோன்’ தாக்குதல்

துருக்கி அருகே கருங்கடலில் மூன்று கப்பல்கள்மீது ‘ட்ரோன்’ தாக்குதல்

1 mins read
ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தால் துருக்கி கருத்துரைக்கவில்லை
92f3eff7-b57c-4aac-8f2f-d12f3952ef6a
ரோமேனியாவில் மே மாதம் 15ஆம் தேதி நடந்த விமானத் தற்காப்புக் கண்காட்சியில் துருக்கியின் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதல் விமானம் இடம்பெற்றது. - படம்: இபிஏ

இஸ்தான்புல்: துருக்கியின் வடக்கு கடற்பகுதியின் அருகே கருங்கடலில் மூன்று பெரிய எண்ணெய்க் கப்பல்கள் ஆளில்லா வானூர்தியால் தாக்கப்பட்டதாக ‘டிரைபெகா’ என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் வியாழக்கிழமை (மே 28) தெரிவித்துள்ளது.

அக்கப்பல்கள், எவ்வித சரக்குகளையும் ஏற்றிச் செல்லவில்லை. மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியா தீபகற்பத்தின் பாலாவ் நாட்டின் கொடியுடன் ‘ஜேம்ஸ் II’ என்ற கப்பலும், ஆப்பிரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டுக் கொடியுடன் ‘அல்துரா’, ‘வெலோரா’ என்ற இரு கப்பல்களும் அக்கடலில் இருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடலோரப் பாதுகாப்புப் படை உடனடியாக அக்கப்பல்களுக்கு உதவ அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கப்பல் சிப்பந்திகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி நலமாக உள்ளதாக நிறுவனம் உறுதிப்படுத்தியது.

உக்ரேன்மீது ரஷ்யா நான்கு ஆண்டுகளுக்கு முன் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, இருநாடுகளும் கருங்கடலில் உள்ள துறைமுகங்கள், கப்பல்கள் என ஒன்றையொன்று எதிர்த்து அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றன.

இத்தாக்குதலை யார் நடத்தினார் என்பது அறியப்படவில்லை. ரஷ்யா, உக்ரேன் இரண்டும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

நாட்டில் இஸ்லாமியப் பண்டிகையான ஹஜ் பெருநாள் கொண்டாட்டத்தால், துருக்கியின் போக்குவரத்து அமைச்சு எவ்விதத் தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்