கியவ்: உக்ரேனின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான கார்க்கிவ் மீது ரஷ்யா ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு (மார்ச் 2) தாக்குதல் நடத்தியதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று சேதமடைந்ததாக மேயர் இஹோர் டெரோகோவ் கூறினார்.
கட்டடம் தீப்பிடித்துக்கொண்டதாகவும் எட்டுப் பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை என்றார் திரு டெரோகோவ்.
மேலும் மூன்று குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் 100க்கும் அதிகமான சன்னல்கள் உடைந்ததாகவும் அவர் கூறினார்.
தாக்குதலில் சேதமடைந்த இடங்களில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யா-உக்ரேன் போர் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.
போரின் தொடக்கத்தில் கார்க்கிவ் நகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் கடுமையாகப் போராடின.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், எதிரிப் படைகளின் தாக்குதல்களை உக்ரேனிய ராணுவம் முறியடித்தது.
இந்நிலையில், அண்மைக் காலமாக கார்க்கிவ் நகரம் மீது ரஷ்யா பல வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி ரஷ்யா நடத்திய தாக்குதல்கள் காரணமாக கார்கிவ் நகரில் உள்ள மருத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) சேதமடைந்தது.

