பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மின்னிலக்கத் தளங்களின் மூலம் பதிவுசெய்யப்படும் வாடகை வாகனச் சேவைகளுக்கான (e-hailing) தொடக்கக் கட்டணம் இரண்டு ரிங்கிட்டுக்குக் (63 காசுக்கு) குறைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (செப்டம்பர் 16) இந்த மாற்றம் நடப்புக்கு வருகிறது. வரித் தொகையையும் உள்ளடக்கும் இந்தக் கட்டணம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஒன்றாம், இரண்டாம் முனையங்கள் இரண்டுக்கும் பொருந்தும்.
முன்னதாக ஒன்றாம் முனையத்தில் கட்டணம் மூன்று ரிங்கிட்டாகவும் இரண்டாம் முனையத்தில் அது 2.16 ரிங்கிட்டாகவும் இருந்தது என்றும் இப்போது அவை ஒரே கட்டணமாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அனுபவப் பிரிவு மூத்த பொது நிர்வாகி அப்துல் ஹஸ்மான் அப்துல் முஹிமின் தெரிவித்தார். இந்த மாற்றத்தைத் தொடர்ந்து இரண்டு முனையங்களிலும் பயணிகள் ஒரே தொடக்கக் கட்டணத்தைத்தான் செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இரு முனையங்களிலும் வாகனச் சேவைகளை மேலும் சுமுகமாக்கும் அதேவேளை, பயணிகளுக்கும் மின்னிலக்கத் தளங்களில் வாடகை வாகனச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் மேலும் சீரான தெரிவுகளை வழங்குவதே மாற்றத்தின் இலக்கு,” என்று மலேசிய ஏர்ப்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) அறிக்கை மூலம் தெரிவித்தது.
