கெய்ரோ: போதைப்பொருள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து எகிப்திய தொலைக்காட்சிப் படைப்பாளர் சாரா கலிஃபா உட்பட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளிகள் அனைவரும், போதைப்பொருள் தயாரிப்புக்கான பொருள்களை இறக்குமதி செய்த குற்றக் கும்பலில் இருந்ததாக எகிப்து அரசாங்கத்துக்குச் சொந்தமான அல்-அஹ்ரம் செய்தித்தாள் தெரிவித்தது. போதைப்பொருள்களை விற்பதே அவர்களின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களிடம் சட்டவிரோதமான துப்பாக்கிகள், ஆயுதங்கள் ஆகியவையும் இருந்தன.
39 வயது கலிஃபா, குற்றங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் ‘மிஷன் இம்போசிபல்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்திப் பிரபலமடைந்தவர். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துவருகிறார்.
இதில் குற்றம் சுமத்தப்பட்ட மேலும் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எழுவர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கலிஃபா தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வார் என்று அவரின் வழக்கறிஞர் கூறினார்.
சென்ற மாதம் முதலில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எகிப்தின் தலைமை முஃப்தியிடமிருந்து சமயரீதியான கருத்தைக் கேட்ட பிறகே மரண தண்டனை ஒரு மாதத்துக்குப் பிறகு உறுதிப்படுத்தப்பட்டது.
எகிப்தில் மரண தண்டனை வழக்குகளில் அவ்வாறு செய்வது கட்டாயமாகும்.


