கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசா பார்க்சிட்டியில் உள்ள சொகுசுக் கூட்டுரிமைக் குடியிருப்பு வீட்டில் ஜனவரி 22ஆம் தேதியன்று அந்நாட்டுக் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் போதைப்பொருள் தயாரிப்பதற்கான ஆய்வுக்கூடம் ஒன்று இருந்தது தெரியவந்தது.
இரவு 9 மணிக்கு அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாகவும் வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த தம்பதி கைது செய்யப்பட்டதாகவும் செந்தூல் காவல்துறைத் தலைவர் அகமது சுகார்னோ முகம்மது ஸஹாரி தெரிவித்தார். அவர்கள் இருவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வயது முறையே 46, 39 எனக் கூறப்பட்டது. வீட்டில் இருந்த மேசையில் கெட்டமின் வகை போதைப்பொருள் கொண்ட பொட்டலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
போதைப்பொருள் தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த ஆய்வுக்கூடத்தில் போதைப்பொருளைப் பொட்டலம் கட்டத் தேவையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த வீட்டில் இருந்த கெட்டமின், மெத்தம்ஃபெட்டமின், கொக்கேன், எம்டிஎம்ஏ தூள் முதலிய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 164,496 ரிங்கிட்.

