தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் போதைப்பொருள் பறிமுதல்; சிங்கப்பூர் ஆடவர் உட்பட ஒன்பது பேர் கைது

2 mins read
e0a78086-7726-482c-bf7c-32cd419ed37a
1.7 மில்லியன் ரிங்கிட் (S$500,000) பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. - படம்: ஜோகூர் காவல்துறை/ஃபேஸ்புக்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல இடங்களில் மலேசியக் காவல்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. இதில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். 1.7 மில்லியன் ரிங்கிட் (S$500,000) பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தக் கும்பல் மார்ச் மாதத்திலிருந்து குற்றச் செயல்களைப் புரிந்து வந்ததாக ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவரான ஆணையர் எம். குமார் தெரிவித்தார்.

அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அடுக்குமாடி வீடுகளை ‘கராவோக்கே’ நிலையங்களாக மாற்றியமைத்து தலைமறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

“நான்கு மலேசிய ஆடவர்கள், மலேசியப் பெண் ஒருவர், சிங்கப்பூர் ஆடவர் ஒருவர், இரண்டு வியட்னாமியப் பெண்கள், லாவோசைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் அந்த அடுக்குமாடி வீடுகளிலிருந்து செயல்பட்டனர். அந்த வீடுகள் பிடிபட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் பெயரிலும் மற்றொருவரின் பெயரிலும் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன.

“வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகளில் இரண்டு வீடுகளைப் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அக்கும்பல் பயன்படுத்தி மக்களை ஈர்த்தது. அதே சமயம் போதைப்பொருளையும் அது விநியோகம் செய்தது.

“போதைப்பொருளைத் தேயிலைப் பைகளிலும் மைக் குப்பிகளிலும் பொட்டலம் கட்டும் பணிகள் மூன்றாவது வீட்டில் நடைபெற்றன,” என்று ஜோகூர் காவல்துறைத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு குமார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் ஆடவர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கான சிங்கப்பூர் அதிகாரிகளால் தேடப்படுபவர் என்று நம்பப்படுவதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்