கோலாலம்பூர்: மலேசியாவின் ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி அனைத்துலகச் சந்தைகளுக்குப் போதைப்பொருள்களைக் கடத்தும் கும்பலை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தெரிவித்துள்ளது.
மலேசிய ஆகாயப் படை அதிகாரிகள் ஐவர் உட்பட 11 தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அனைத்துலக நாடுகளுக்குச் செல்லும்முன் போதைப்பொருள்கள் சாபா மாநிலத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதாக நம்பப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கு, லெபுவான் ஆகிய பகுதிகளில் ஆகாயப் படையுடன் சேர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகள் மூலம் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் கூறினார்.
சோதனை நடவடிக்கைகள் மூலம் 4.83 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மெத்தெம்ஃபெட்டமின் 96.64 கிலோகிராம் போதைப்பொருள் சிக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 6.98 கிலோகிராம் எடையுள்ள திரவ ரசாயனப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானோரில் இரண்டு சந்தேக நபர்கள் ஆகாயப் படையைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
அவர்கள், ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு குற்றக் கும்பலின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும் ஒருங்கிணைக்கவும் உதவியாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
“கும்பலின் தலைவர் என்று நம்பப்படும் மற்றோர் மலேசியரை அதிகாரிகள் தேடிவருகின்றனர். ஒட்டுமொத்தக் கும்பலின் கட்டமைப்பையும் பிற தரப்பினர் ஈடுப்பட்டுள்ளனரா என்பதையும் கண்டுபிடிக்க முயன்றுவருகிறோம்,” என்றார் திரு ஹுசேன்.
இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து குற்றக் கும்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சாபா மாநிலத்துக்குள் போதைப்பொருள்களைக் கடத்திக் கொண்டுவர ஆகாயப் படையின் விமானங்களைப் பயன்படுத்தியதாகச் சொன்னார்.
சம்பவம் தொடர்பில் பிடிபட்ட ஆகாயப் படை அதிகாரிகள் ஐவரும் இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிவரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர் என்றார் அவர்.
