இலங்கைச் சிறைக் கலவரத்துக்கு போதைப்பொருள் கடத்தலே காரணம்: அமைச்சர்

இலங்கைச் சிறைக் கலவரத்துக்கு போதைப்பொருள் கடத்தலே காரணம்: அமைச்சர்

படம்: ராய்ட்டர்ஸ்

07 Jul 2026 - 9:52 pm

2 mins read

கொழும்பு: இலங்கையின் சிறைச்சாலை ஒன்றில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே, அங்கு ஏற்பட்ட கலவரத்திற்குக் காரணம் என்று உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) தெரிவித்தார். அந்தக் கலவரத்தில் 26 பேர் மாண்டனர். பலர் காயமுற்றனர்.

மாண்டோரில் சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரும் அடங்குவர்.

தலைநகர் கொழும்புக்கு வடக்கே கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோர நகரமான நீர்கொழும்பில் உள்ள சிறையில் சம்பவம் நடந்தது. அங்கிருந்த கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே மோதல் இரண்டு நாள்கள் நீடித்தது.

சிறைக்குள் போதைப்பொருள்களைக் கடத்துவதற்கான முயற்சிகள் குறித்த தகவலைக் கைதிகள் சிலர், சிறை அதிகாரிகளுக்குக் கசியவிட்டதால் மோதல் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன. நீதி, தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

“இது கடத்தலுக்கு ஆதரவாக இருந்த மற்றொரு குழுவினருக்குச் சினத்தை ஏற்படுத்தியது. இதுவே மோதல் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்தது,” என்றார் அவர்.

சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட முயன்றபோது நிலைமை மோசமானதாகத் திரு நாணயக்கார சொன்னார். கைதிகள் செங்கற்களையும் கழிகளையும் கொண்டு அதிகாரிகளைத் தாக்கினர். அவர்களுக்கு ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்பது இன்னமும் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.

சிறையில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைப்பதற்காகச் செவ்வாய்க்கிழமை காலை 734 கைதிகள் நான்கு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைத் துறை தெரிவித்தது.

நீர்கொழும்பு சிறையில் ஏறக்குறைய 650 கைதிகளை மட்டுமே தங்கவைக்க வசதிகள் இருந்தன. ஆயினும் கிட்டத்தட்ட 2,400 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்ததால் கடுமையான நெரிசல் உண்டானது.

குறிப்புச் சொற்கள்