விமானத்தில் போதைப்பொருள் பறிமுதல்: லாவோசில் சிங்கப்பூர் விமானி கைது

விமானத்தில் போதைப்பொருள் பறிமுதல்: லாவோசில் சிங்கப்பூர் விமானி கைது

சிங்கப்பூரர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்
படம்: வியேட்டர்

07 Oct 2026 - 3:23 pm

2 mins read

கோலாலம்பூர்: லாவோஸ் நாட்டில் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தனியார் விமானம் ஒன்றில் இருந்த 521 கிலோகிராம் அளவிலான மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தத் தனியார் விமானம் மலேசியாவிலிருந்து வரவில்லை. எனினும், அது, மலேசியாவிலிருந்து பிலிப்பீன்சுக்குக் கடத்திச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சுபாங்கிலிருந்து புறப்பட்ட விமானம்

தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவ்விமானம் சரக்குகள் ஏதுமின்றி சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அசிஸ் ‌ஷா விமான நிலையத்திலிருந்து லாவோசின் லுவாங் பிரபாங் நகருக்குப் புறப்பட்டதாக லாவோஸ் அதிகாரிகள் அளித்த தகவல்களில் தெரியவந்ததாக அமான் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு (என்சிஐடி) இயக்குநர் ஹுசைன் உமர் கான் கூறினார். அந்த விமானத்தில் மூவர் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்தார். அந்த மூவரில் சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றைச் சேர்ந்த விமானிகள் இருவரும் பிலிப்பீன்சைச் சேர்ந்த பயணி ஒருவரும் அடங்குவர்.

“பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பிலிப்பீன்சில் உள்ள மணிலா சந்தைக்கானவையே தவிர மலேசியச் சந்தைக்கானது அல்ல. அந்த விமானம் சுபாங் விமான நிலையத்திலிருந்து சரக்கின்றி புறப்பட்டது. பிறகு அது லாவோசிலிருந்து மணிலாவுக்குப் போதைப்பொருளைக் கொண்டு சென்றதாக நம்பப்படுகிறது,” என்று அவர் அறிக்கை மூலம் தெரிவித்தார். எந்தெந்த நேரத்தில் என்ன நடந்தது என்ற தகவல்களை லாவோஸ் அதிகாரிகள் வெளியிட்டனர். அவற்றைப் பற்றி விவரித்த திரு ஹுசைன், விமானம் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 1ஆம் தேதி காலை 11.30 மணியளவில் லுவாங் பிரபாங் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்ததாகச் சொன்னார்.

“பிற்பகல் 1.30 மணிக்கு இரு வாகனங்கள் விமான நிலைய வளாகத்தை வந்தடைந்தன. விமான நிலைய ஊழியர்கள் பலர் அந்த வாகனங்களிலிருந்து 23 பைகளைத் தள்ளுவண்டிகளில் ஏற்றி விமானத்தில் ஏற்ற உதவினர்.

“அந்த 23 பைகளையும் சோதனையிட்டபோது 521 கிலோகிராம் எடைகொண்ட மெத்தம்ஃபெட்டமின் இருந்ததாக நம்பப்படும் 500 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன,” என்று திரு ஹுசைன் தெரிவித்தார்.

லாவோஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து 13 பேர் கைது செய்யப்பட்டனர். சுபாங்கிலிருந்து புறப்பட்ட மூன்று விமான ஊழியர்களும் ஒரு பயணியும் அவர்களில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்லாவோஸ்கடத்தல்பிலிப்பீன்ஸ்மலேசியாநடவடிக்கைவிமானம்கைது