அடையாள அரசியல், தேசியவாத அரசியல் என்ற விசைகளால் பல பக்கம் இழுக்கப்படும் மக்கள், ஒருவரையொருவர் சந்திப்பதற்கான பொதுவெளியை மெல்ல இழந்து வருகின்றனர்.
மாற்றுக் கருத்து உள்ளோருடன் பேசி ஒருவரையொருவர் சகித்துக்கொள்ளும் வாய்ப்பும் குறைகிறது. கிட்டத்தட்ட ஒரே கருத்து உள்ளவர்கள் பிறரை விலக்கித் தங்களுக்கென்ற மெய்நிகர்ச் சமூகத்தை உருவாக்க முனைகின்றனர்.
தீவிர எண்ணப்போக்கு உடையவர்கள், தங்கள் கொள்கைகளுக்கு மாறானவற்றைக் கேட்க விரும்புவதில்லை. தகவல்களை நடுநிலையுடன் கூறும் நிபுணர்களின் வார்த்தைகள் இத்தகையோரின் காதுகளைப் பல சந்தர்ப்பங்களில் எட்டுவதில்லை.
அத்துடன், இளையர்கள் சிலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே கைவிடப்பட்டதுபோல உணரக்கூடும். தங்கள் அடையாளம் குறித்த கேள்விகளும் சந்தேகமும் எழலாம்.
அமெரிக்காவில் சமூக விவகாரங்களில் இடதுசாரி கொள்கை உடையவர்களிடையே பாலினம் தொடர்பில் தாராள எண்ணப்போக்கு காணப்படுகிறது.
மூன்றாம் பாலினத்தவர், தன்பால் ஈர்ப்பு உள்ளவர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகவும் கருக்கலைப்பு செய்யும் உரிமைக்காகவும் சிறுபான்மை இனத்தவர்க்கும் சமயத்தவர்க்கும் குரல்கொடுப்பவர்களாக இவர்கள் முன்னிலையாவர். ஆனால் இவர்கள் இவ்வாறு செய்ய முற்படும்போது பிறரின் சமய உணர்வுகள் பாதிப்படைவதைக் காண்கிறோம். அமெரிக்காவில், குறிப்பாக, அதன் தென்பகுதியில் சமயப் பற்றாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இடசாரியினர், தங்களது சொந்த நிலைப்பாடுகள் குறித்த ஆர்வ மிகுதியால் சமய நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவதை ஜான் ஸ்டுவர்ட் நிகழ்ச்சி, சவுத் பார்க், ஃபேமலி காய் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாகக் காண்கிறோம்.
சில வட்டங்களிடையே பெண்ணியக் கொள்கையில் ஏற்பட்டுள்ள சீர்கேடு, ஆண்களுக்கு எதிரான வெறுப்பலைகளைக் கிளப்பியுள்ளதாக ஒரு பார்வையும் எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆணாதிக்கத்தை எதிர்க்கலாம். ஆனால் ஆண் இனமே வெறுக்கப்படுவதாக இளம் ஆடவர்கள் சிலர் உணரும்போது அதன் பின்விளைவுகள், நாம் நினைப்பதைவிடக் கடுமையானவை.
கட்டுப்பாடற்ற இடசாரிப்போக்கிற்கு எதிர்வினையாக முழுவீச்சுடன் செயல்படுகிறது ‘ஆல்ட்-ரைட்’ இயக்கம். 2010 முதல் மெல்ல உருப்பெற்று வந்த இயக்கம், வெள்ளை இனத்து ஆண்களின் உரிமைகளைத் தற்காத்து வருவதாகக் கூறிவந்தது.
ஸ்டீவ் பேனன், பென் ஷார்பீரோ, ஜோ ரோகன் என இந்த இயக்கத்திற்காகப் பிரசாரம் செய்து வருவோரில் சார்லி கிர்க்கும் ஒருவர்.
வலையொலிகளிலும் மாநாடுகளிலும் சர்லி கிர்க் கூறிய பல்வேறு வாசகங்கள், பெண்களுக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் மாறுபட்ட பாலினத்தன்மை உள்ளவர்களுக்கும் எதிரானவை.
கருத்துச் சுதந்திரத்தை முழுமையாகப் பேணும் அமெரிக்காவில் நிதானமும் சமூக உணர்வும் இழந்து, தங்கள் நேயர்களின் சாயலுக்கேற்பப் பேசும் பலரில் சார்லி கிர்க்கும் ஒருவர்.
மாற்றுக் கருத்துகளை நையாண்டி செய்வதும் சார்லி கிர்க்கின் வாடிக்கையாக இருந்தது.
ஒருபக்கம், அவரது எண்ணப்போக்கு உள்ளவர்கள் உற்சாகமடைந்து அவரைப் பெருமளில் ஆதரித்தனர்.
மறுபக்கம், இனவாதத்தையும் ஆதிக்க மனப்பான்மையைும் எதிர்க்கும் தரப்பு கோபத்தில் கொதித்திருந்தனர்.
வலதுசாரியினரை, தீவிர தேசியவாதிகளை, ஆதிக்க எண்ணம் கொண்டவரை வலுவாக ஆதரிக்கும் ஒருவர், அதிபர் நாற்காலியில் அமர்வதாக எண்ணி எதிர்த்தரப்பு வேதனை அடைகிறது.
இந்த வேதனைக்கும் வன்முறைக்கும் இடையே என்னென்ன படிநிலைகள் உள்ளது என்பதை அமெரிக்காவில் உள்ளவர்கள் மட்டுமின்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
வேறு வழியே இல்லை, வன்முறையைத்தான் கையாள வேண்டும் என்ற எண்ணப்போக்கிற்குத் தள்ளிவிடும் தரப்பினரும் ஆளுமைகளுமே வன்முறைக்கு உடந்தை.
மூன்றாம் பாலினத்திற்கு எதிராகப் பேசி அவர்களுக்கு எதிராகச் சார்லி கிர்க் வன்முறையைத் தூண்டியுள்ளார் என்ற கருத்தில் நியாயமுள்ளது.
பேசுவதற்குச் சுதந்திரம் உள்ளது, எதையும் உடைத்துப் பேசுவதே சரியானது என்ற எண்ணத்தில் பேசும் கிர்க்கைத் தட்டிக்கேட்க அமெரிக்காவில் ஆளில்லையோ என்ற எண்ணம், விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளதைக் கண்கூடாய்க் கண்டோம்.
மனிதத்தன்மையின் மதிப்பைக் குறைக்கும் எந்தக் கொள்கையும் தீய கொள்கையாக மாறும். கோபம், பழியுணர்வைக் கடப்பவர்கள், காயம்பட்ட உலகிற்கு மருந்தாவர்.