ஜகார்த்தா: இந்தோனீசியாவின் காடுகளிலும் விவசாய நிலங்களிலும் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ காரணமாக உருவாகியுள்ள நச்சுப் புகைமூட்டத்தைக் கலைக்க, அந்நாட்டு அதிகாரிகள் உலர் பனிக்கட்டித் துகள்களைத் தெளிக்கும் புதிய சோதனை முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தெற்கு சுமத்ரா மாநிலத்தின் வான்வெளியில், உலர் பனிக்கட்டித் துகள்களை விமானம் மூலம் தெளிக்கும் சோதனையை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
வழக்கத்திற்கு மாறான வலுவான எல் நினோ பருவநிலையால் வறட்சி நிலைமை தீவிரமடைந்து, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாகியுள்ளதால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக மோசமான காட்டுத்தீப் பருவத்தை இந்தோனீசியா எதிர்கொள்கிறது.
அபாயகரமான இந்த நச்சுப் புகையை அகற்றும் அவசர முயற்சியாக, இந்தோனீசியாவும் அதன் அண்டை நாடான மலேசியாவும் பல்வேறு செயற்கை மழைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன.
வெள்ளி அயோடைட் போன்ற வேதிப் பொருள்களை மேகங்களில் தூவி பனிப்பளிங்குகளை உருவாக்கி, இயற்கையான நீராவி செறிவூட்டலை விரைவுபடுத்தும் இத்தகைய செயற்கை மழைக்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் பல வாரங்களாகச் செய்துவருகின்றனர்.
ஆனால், வியாழக்கிழமை (அக்டோபர் 15) நடத்தப்படும் இந்த உலர் பனிக்கட்டிச் சோதனை முந்தைய முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மேகங்களுடன் வினைபுரிந்து மழையை வரவழைப்பதற்குப் பதிலாக, வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் உள்ள புகைமூட்டத்தை உடைத்து மேல்நோக்கி உயரச் செய்வதே உலர் பனிக்கட்டியின் நோக்கம் என்று அரசியல், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் டுடுங் அப்துரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனை வெற்றிபெற்றால், மத்திய கலிமந்தான் போன்ற புகைமூட்டம் அதிகமாக உள்ள மற்ற மத்தியப் பகுதிகளிலும் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
