கோலாலம்பூர்: மலேசியாவின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்வரை அதிகரித்திருக்கும் நிலையில் கடுமையான, நீண்டகால வறட்சியை எதிர்கொள்ள நாடு தயாராகி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடுமையான வெப்பமும் தண்ணீர்த் தட்டுப்பாடும் ஜூன் மாதம்வரை நீடிக்கக்கூடும் என்று இயற்கைவள, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆரதர் ஜோசப் குருப் கூறியுள்ளார்.
அபாயமிக்க வானிலைச் சூழலுக்குள் மலேசியா நுழைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அபாயத்தைத் தணிக்க அண்மையில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் மிகவும் சவாலான மாதங்கள் இனி வர இருப்பதாக அவர் எச்சரித்தார்.
“ஏப்ரல், மே மாதங்கள், அநேகமாக ஜூன் மாதம்வரை மிக வறண்ட மாதங்களாக இருக்கும் என அரசாங்கம் கருதுகிறது.
“வெப்பநிலை அதிகமாக உயர்ந்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்.
“தற்போதைய நிலவரப்படி வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசை எட்டியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
“அதனால், நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கிறோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) நடைபெற்ற ‘அனைத்துலக நீடித்த நிலைத்தன்மை வாரம் 2026’ என்னும் நிகழ்வில் பங்கேற்க வந்த திரு குருப் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்
பருவமழை தப்பியதால் ஏற்பட்டுள்ள வெப்ப அலையால், நாட்டின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வறட்சியடையத் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் கெடா, பெர்லிஸ், பேராக், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மழையை வரவழைக்க அரசாங்கம் முதற்கட்ட ‘மேக விதைப்பு’ நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆயினும், நெருங்கி வரும் நீர் நெருக்கடிக்கு அது ஓர் உறுதியான தீர்வை வழங்கவில்லை என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
“ஆங்காங்கே மழை பெய்தாலும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதா என்பதைக் கண்டறிவதே முக்கிய அளவுகோல்களில் ஒன்று. ஆனால், நீர்மட்டம் நாங்கள் எதிர்பார்த்த இலக்கை இன்னும் எட்டவில்லை.
“அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து முக்கியக் கவலையாகவே நீடித்து வருகிறது. அதனால், அடுத்த வாரம் இரண்டாம் கட்ட ‘மேக விதைப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குறிப்பாக, ஜோகூர், மலாக்கா போன்ற தென்மாநிலங்களில் தனிக்கவனம் செலுத்தப்பட உள்ளது,” என்றார் திரு குருப்.

