ஜோகூர் பாரு: வெப்பமான, வறண்ட வானிலை காரணமாக, ஜோகூர் முழுவதும் புதர், கரிநிலத் தீச்சம்பவங்கள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளன.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், 2,375 ஹெக்டர் பரப்பளவிலான நிலப்பகுதியில் 3,145 திறந்தவெளித் தீச்சம்பவங்கள் பதிவானதாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் சிதி ரொஹானி நாடிர் கூறினார். 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவான ஏறத்தாழ 700 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகப் பெரிய உயர்வாகும் என்றார் அவர்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவான புதர், கரிநிலத் தீச்சம்பவங்களே அதற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
“நீடித்த வெப்பமான வானிலை, மழைப்பொழிவு இல்லாமை, பலத்த காற்று ஆகியவை புதர்கள், தோட்டங்கள், பிற திறந்தவெளிப் பகுதிகள் ஆகியவற்றில் தீ ஏற்படக் காரணங்களாக அமைந்தன,” என்று அவர் தெரிவித்தார்.
ஜோகூர் பாருவில் உள்ள ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற அத்துறையின் மாதாந்தரக் கூட்டத்திற்குப் பிறகு, திருவாட்டி சிதி ரொஹானி செய்தியாளர்களிடம் பேசினார்.
“மனிதச் செயல்பாடுகள், குறிப்பாக அறுவடைக்குப் பிறகு நிலங்களைச் சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் திறந்தவெளி தீவைப்பு நடவடிக்கைகளும் அந்த அதிகரிப்புக்குக் காரணம்,” என்றார் அவர்.
ஜோகூரில், இதுவரை 18 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் முவார், கோத்தா திங்கி, மாச்சாப் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் திருவாட்டி சிதி ரொஹானி கூறினார்.
தீச்சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்காக, தீப்பற்றக்கூடிய பகுதிகளில் அடிக்கடி சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுமாறு தீயணைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

