துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) வேலை செய்யும் 52 வயது இந்தியர் ஒருவர், துபாயில் நடந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் மாபெரும் பரிசுத் தொகையாக US$1 மில்லியன் (ரூ.8.5 கோடி) வென்றுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேணுகோபால் முள்ளஞ்சேரி, அஜ்மானில் தகவல் தொழில்நுட்ப ஆதரவுப் பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கெடுத்து வந்துள்ள அவர், “பரிசுத் தொகையை வென்றுள்ளது தமது தோள்களிலிருந்து பெருஞ்சுமை நீக்கப்பட்டதுபோன்ற உணர்வைத் தருகிறது.
“வாழ்வின் மிகக் கடினமான அத்தியாயத்தின் முடிவையும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த புதிய ஒன்றின் தொடக்கத்தையும் இந்த வெற்றி குறிக்கிறது,” என்றார்.
தம் குடும்பத்தைப் பார்க்க இந்தியாவுக்குச் சென்று திரும்பியபோது, ஏப்ரல் 23ஆம் தேதி துபாய் விமான நிலையத்தில் வெற்றி குலக்கல் சீட்டை முள்ளஞ்சேரி வாங்கியிருந்தார். அவரது நீண்டநாள் விடாமுயற்சிக்குப் பலன் கிடைத்தது. ‘துபாய் டியூட்டி ஃபிரீ மில்லென்னியம் மில்லியனேர்’ குலுக்கலின் 500வது வெற்றியாளராக அவர் திகழ்கிறார்.
வாழ்வில் தாம் எதிர்கொண்ட சிரமங்களை நினைவுகூர்ந்த முள்ளஞ்சேரி, தாம் கடும் கடன்சுமையைச் சந்தித்ததாகச் சொன்னார். இன்னும் சொல்லப் போனால், தாம் அதிகம் நம்பிக்கை வைத்திருந்த ஒருவரால் ஏமாற்றப்பட்டதால் முள்ளஞ்சேரி மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்.
“அண்மையில் நான் வீடு ஒன்றைக் கட்டினேன். இதனால் நான் கடுமையான பண நெருக்கடிக்கு ஆளாகினேன். நாம் நம்பிக்கை வைத்திருந்தவர் என்னை ஏமாற்றியது, நிலைமையை மோசமாக்கியது. அந்த வகையில், இந்தப் பரிசுத் தொகை என்னை நிச்சயம் காப்பாற்றியுள்ளது,” என அவர் பகிர்ந்தார்.
இரு பிள்ளைகளுக்குத் தந்தையான முள்ளஞ்சேரி, முதலில் கடனை அடைத்துவிட்டு தம் குடும்பத்துடன் விடுமுறைப் பயணம் செல்ல விரும்புகிறார்.
“நான் இன்னும் அனைத்தையும் முடிவெடுக்கவில்லை. என்றாலும், நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டு என் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து நேரம் செலவிடுவேன்.
தொடர்புடைய செய்திகள்
“பின்னர் யுஏஇக்கு திரும்பி இங்கு தொழில் தொடங்கி, என் குடும்பத்தாரை இங்கு அழைத்து வருவேன். யுஏஇ, என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. வேறெங்கிலும் வாழ்வதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை,” என்றார் முள்ளஞ்சேரி.

