துபாய்: உணவு விநியோகத் துறையும் மின்வணிகமும் செழிப்புற்று வருவதால் சமையலறை இல்லா வீடுகளைக் கொண்ட உலகின் முதலாவது பெருநகரம் என்ற பெருமையை துபாய் விரைவில் பெறக்கூடும்.
துபாயில் சமையலறை இல்லாக் கட்டடங்களை அமைக்கும் திட்டங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார், முன்னணி ‘நூன்’ மின்வணிகத் தளத்தின் நிறுவனர் முகம்மது அலி அலப்பார்.
“உண்மையில், அத்தகைய சில கட்டடங்களை வடிவமைத்து இருக்கிறோம்,” என்று அவர் சொன்னதாக துபாய் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெருவளர்ச்சி கண்டுவரும் இணையவழி உணவு விநியோகத் தொழிலானது உணவுப் பழக்கங்களை மாற்றியிருப்பதாக திரு அலப்பார் கூறினார்.
“சமையலறை இல்லாக் குடியிருப்புகளை விற்க முடியும் என நம்புகிறேன். உணவு விநியோகத் துறை வெகுவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சீன, அமெரிக்க, மெக்சிகன் என வெவ்வேறு வகை உணவுகளை விரும்புகின்றனர்,” என்றார் பெருஞ்செல்வந்தரான திரு அலப்பார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் தம்முடைய ‘நூன் ஃபுட்’ முன்னணி நிறுவனமாக உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.