துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ஆக அதிக மக்கள் தொகை கொண்ட நகரான துபாய் அண்மைய காலம்வரை அமைதிக்கும் பாதுகாப்புக்கும் புகழ்பெற்றிருந்தது.
உலகிலேயே மிகவும் குறைவான குற்றங்கள் நடக்கும் இடமாகவும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அந்நகரை விளம்பரப்படுத்தி வந்தன.
ஆனால் மத்திய கிழக்குப் போர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியதுமுதல் அமெரிக்காவின் ஆதரவாளர் என்ற வகையில் அந்த நகரையும் ஈரான் குறிவைத்துத் தாக்கிவருகிறது.
அந்நகரில் பலர் ஈரான் நடத்திய தாக்குதல்களின் காணொளிகளைப் பகிர்ந்துவந்தனர். ‘பாதுகாப்பான புகலிடம்’ என நற்பெயர்பெற்ற அந்த நகருக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் அதிகாரிகள் அவ்வாறு காணொளிகளைப் பகிர்வோர்மீது நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
துபாயின் சமூக ஊடகப் பிரபலங்கள் அவ்வாறு பகிர்வோரைக் கண்டித்து அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் தேசிய சிந்தனையை முன்னிறுத்தி, நாட்டுப் பற்றை வளர்க்கும் விதமாகவும் செயல்பட்டுவருகின்றனர். ‘துபாய் என்றுமே பாதுகாப்பாகவே இருக்கும்’ என்று அவர்கள் பதிவிட்டுவருகின்றனர்.
இதற்கிடையே, ஈரான் அண்டை நாடுகள்மீது இதுவரை நடத்தியுள்ள தாக்குதல்களில் துபாய் நகரையே அதிகம் குறிவைத்துள்ளது. ஏறத்தாழ 1,800 ஏவுகணைகளை துபாய்மீது ஈரான் பாய்ச்சியுள்ளது. அவற்றில் பலவற்றை தற்காப்பு கட்டமைப்புகளைக் கொண்டு துபாய் தடுத்திருந்தாலும் அமைதிக்கான அதன் நற்பெயர் தகர்க்கப்பட்டுள்ளது.
துபாய் நகரின் பொருளியலுக்கும் நீண்டநாள் நலனுக்கும் போர் பயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அரசாங்கம் மக்களுக்கு நாடு நலமாகவே உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டுவருகிறது.
துபாய் நகரில் வாழ்பவர்களில் 90 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்கள் ஆவர். சுற்றுலாச் சேவை சார்ந்த துறைகளில் அவர்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். அதன்வழியாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் எண்ணெய் விற்பனைத் துறையின் மீதான கவனத்தை அவர்கள் திசைதிருப்ப உதவியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
போர் தொடங்கிய ஆரம்ப நாள்களில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் முகம்மது பின் சாயெட் அர் நஹ்யான் அவரது ஆதரவாளர்களுடன் துபாய் கடைத்தொகுதிகளை வலம் வந்து மக்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் செல்லும் முக்கிய இடங்களான துபாய் மால், ஜெபிஆர் கடற்கரை ஆகியவற்றுக்கு ஒரு சிலரே தற்போது சென்றுள்ளனர். பல பயணிகள் துபாயை விட்டு வெளியேறிவிட்டனர்.

