கொழும்பு: இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்புடைய தவறான பணப் பரிமாற்றம், நிதி முறைகேடு ஆகிய இரு வெவ்வேறு சம்பவங்கள் குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் உள்ள சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் முடக்கப்பட்டதால் ஏற்பட்ட தவறான பணப் பரிமாற்றம், இந்தியாவில் உள்ள சென்னை அலுவலகத்தில் நடந்த நிதி முறைகேடு ஆகிய சம்பவங்கள் அதில் அடங்கும்.
இந்த இரு விவகாரங்கள் குறித்தும் தற்போது தீவிர நாடாளுமன்றத் தணிக்கை, புலனாய்வு விசாரணை நடந்து வருவதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
துபாயைத் தளமாகக் கொண்ட சேவை வழங்குநரின் முடக்கப்பட்ட மின்னஞ்சல் கணக்கு மூலமாக அனுப்பப்பட்ட போலி வங்கி விவரங்களை நம்பி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 974,000 திராம் (341,490.15 வெள்ளி) தொகையைத் தவறாகப் பரிமாற்றம் செய்து ஏமாந்தது.
இந்த மோசடி கண்டறியப்பட்டவுடன் அடுத்தகட்டப் பணப் பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, துபாய் அதிகாரிகள், இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.
அதேநேரத்தில், இந்தியாவின் சென்னை அலுவலக நிதித் துறையில் பணியாற்றிய இந்திய ஊழியர்கள் சிலர், போலிக் கட்டணம், கையொப்பங்கள் மூலம் 22 மில்லியன் இந்திய ரூபாய் (293,927.04 வெள்ளி) வரை முறைகேடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டதாகவும் அவர்களுக்கு எதிராக முறையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் இந்தியாவின் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விமான நிறுவனம் மேலும் தெரிவித்தது.

