அயர்லாந்து தலைநகர் டுப்ளினையும் அமெரிக்காவின் நியூயார்க் நகரையும் இணைக்கும் நேரடி இணையவாசல், சிலரின் முறைகேடான நடத்தையால் தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இரு நகர்களையும் இணைக்க ‘வெப்கேம்’ படக்கருவியைப் பயன்படுத்தும் இருவழித் தொடர்பு சாதனமான அந்த இணையவாசல் முன்பாக சிலர் தகாத முறையில் நடந்துகொண்டதால் சர்ச்சை எழுந்தது.
மக்களில் ஒருசிலர் அந்தச் சாதனத்துக்கு முன்னால் நின்று உடலின் அந்தரங்கப் பகுதிகளைக் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். நியூயார்க்கில் மாடல் அழகி ஒருவர், தாம் அணிந்திருந்த டீ-சட்டையைத் தூக்கி புகைப்படக் கருவிக்கு முன் ஆடினார். வேறொருவர், செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களைக் காட்டும் புகைப்படத்தைக் காட்டினார்.
இதனால் தற்காலிகமாக மூடப்பட்ட அந்த இணையவாசல், ஐந்து நாள்களுக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகளுடன் ஞாயிற்றுக்கிழமை (மே 19) மீண்டும் திறக்கப்பட்டது.
புதிய நடைமுறைகளின்படி, இணையவாசலின் செயல்பாடு வரும் வாரங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மற்றொரு நகரை நேரலையாகக் காட்டும்.
மே 8ஆம் தேதி இந்த இணையவாசல் திறக்கப்பட்டபோது மற்றொரு நகரில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் பெரிய திரையில் காண முடிந்தது.

