புத்ரஜெயா: மலேசியாவில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் பெருஞ்செல்வந்தர் சொசிலாவாத்தியையும் அவரது மூன்று உதவியாளர்களையும் கொன்றதற்காக இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்படாது என்று அரசு நீதிமன்றத்தின் மறுஆய்வுக் குழு இன்று தீர்ப்பளித்தது.
முன்னாள் வழக்கறிஞர் என். பத்மநாபன், 55, முன்னாள் பண்ணை ஊழியர் டி. தில்லையழகன், 33, ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சரியானது என்று தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் வழிநடத்தும் மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு கூறியது.
“வழக்கின் சூழ்நிலை, உண்மை நிலவரங்களின் அடிப்படையில் மறுஆய்வு நிராகரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
மூன்றாவது குற்றவாளியான ஆர். காத்தவராயனும் தனது தண்டனையை மறுஆய்வு செய்ய தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், தமது கட்சிக்காரர் அவரது மனுத் தாக்கலைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக பின்னர் வழக்கறிஞர் லதீஃபா கோயா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
‘கட்டாய மரண தண்டனை நீக்கும் சட்டம் 2023’ நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, அம்மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனைக்குக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அந்தச் சட்டத்தின்படி, மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை விதிப்பதற்கு நீதிபதிகளுக்கு உரிமை உள்ளது.
2013ஆம் ஆண்டு மே மாதம், அம்மூவருடன் பண்ணை ஊழியர் ஆர். மதனும், சொசிலாவாத்தி, 47, அவரது ஓட்டுநர் கமாருடின் ஷம்சுடின், 44, வங்கி அதிகாரி நூர்ஹிஷாம் முகம்மது, 38, வழக்கறிஞர் அகமது அப்துல் கரிம், 32, ஆகியோரைக் கொலை செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இருப்பினும், 2017ஆம் ஆண்டில் போதிய ஆதாரம் இல்லாததால் அரசு நீதிமன்றம் மதனை விடுவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கொலைகள் கொடூரமான முறையில் செய்யப்பட்டதால் மரண தண்டனை மறுவுறுதி செய்யப்படவேண்டும் என்று அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் டுசுக்கி மொக்தார் கூறினார்.


