கோலாலம்பூர்: கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள கேளிக்கை விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், வெளிநாட்டவர் ஒருவரைத் தடுத்துவைக்க முயன்ற மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
சந்தேக நபர் தாக்கியதில் அந்த அதிகாரியின் இடது கால் முறிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குடிநுழைவுத் துறையின் அமலாக்க பிரிவு இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த வெளிநாட்டவர் தப்பிச் சென்றதாகவும் அவர் கூறினார். மருத்துவமனைக்கு விரைந்த அதிகாரியின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிகாலை நிறைவுபெற்ற சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் பஸ்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.
வியாழக்கிழமை (பிப்ரவரி 26) அதிகாலை 3.15க்கு தொடங்கிய அந்தச் சோதனை நடவடிக்கையில் 85 அதிகாரிகள் பங்கேற்றனர். மொத்தம் 98 பேர் சோதனை செய்யப்பட்டநிலையில், பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக 48 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட கூடுதலாக தங்கியிருப்பது, சட்டபூர்வ ஆவணங்களை வைத்திராதது ஆகிய குற்றங்கள் அடையாளம் காணப்பட்டன.

