சாகசக் காட்சியின்போது விமானம் நொறுங்கி விழுந்து விமானிகள் மரணம்

சாகசக் காட்சியின்போது விமானம் நொறுங்கி விழுந்து விமானிகள் மரணம்

1 mins read
42c4978f-0bd7-43d6-b7a6-3b28ef9e5ab8
விழுந்து நொறுங்கியதும் விமானம் வெடித்துச் சிதறியதாகக் கூறப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் சனிக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற்ற வான்சாகச நிகழ்ச்சியின்போது, எஃப்-4 ஃபேன்டம் வகை ராணுவப் போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அதில் இருந்த விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.

தலைநகர் ஏதென்சுக்கு வடக்கே அமைந்துள்ள தனக்ரா விமானத் தளத்தில் அந்த சாகச நிகழ்வு இடம்பெற்றதாக கிரேக்கச் செய்தி நிறுவனமான ஏஎன்ஏ தெரிவித்துள்ளது.

சாகச நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரெனத் தாழ்வாகப் பறந்து, கீழே விழுந்து நொறுங்கியது.

விழுந்து நொறுங்கியதும் அவ்விமானம் பேரோசையுடன் வெடித்துச் சிதறியதாக அங்கு இருந்த அரசு ஒலிபரப்பு நிறுவனச் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

விமான விபத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆயினும், விபத்தில் சிக்கிய விமானிகள் இருவரும் விமானத்திலிருந்து வெளியேறும் வசதியைப் பயன்படுத்தவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விபத்தைத் தொடர்ந்து வான்சாகச நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.

மேலும், அனைத்துலகச் சந்தைக்குச் செல்லவிருந்த கிரேக்கத் தற்காப்பு அமைச்சர் நிக்கோஸ் டெண்டியாஸ் தமது பயணத்தை ரத்து செய்துவிட்டு, விபத்து நேர்ந்த இடத்தைப் பார்வையிடச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கிரீஸ்விமானம்விபத்துசாகசம்