நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் இ. கோலை நோய்ப் பரவலுக்கும் மெக்டோனல்ட்ஸ் (McDonald’s) துரித உணவகம் விற்கும் குவார்ட்டர் பவுண்டர்ஸ் (Quarter Pounder) ‘பர்கர்’ உணவு வகைக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் மேலும் பல துரித உணவகங்கள் பச்சை வெங்காயம் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன. டேக்கோ பெல், பீட்ஸா ஹட், பர்கர் கிங், கேஎஃப்சி (Taco Bell, Pizza Hut, Burger King, KFC) போன்ற துரித உணவகங்கள் சில கிளைகளில் பச்சை வெங்காயம் சேர்க்காமல் பிரபல உணவு வகைகளைத் தயார்செய்கின்றன.
இந்த இ. கோலை நோய்ப் பரவல் இதுவரை ஒருவரைப் பலிவாங்கியுள்ளது. மேலும் 49 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
நோய்ப் பரவல் எங்கிருந்து தொடங்கியது என்பதை அமெரிக்க மத்திய அரசாங்க அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மெக்டோனல்ட்ஸ் விற்கும் குவார்ட்டர் பவுண்டர்ஸ் உணவு வகையில் சேர்க்கப்படும் பச்சை வெங்காயம் நோய்ப் பரவலை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அத்தகைய பச்சை வெங்காயத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க உணவு அமைப்பு (US Foods) உணவகங்களுக்கு உத்தரவிட்டது.

