முக்கிய உணவுத் திட்டத்தை பார்வையிட்ட இந்தோனீசிய அதிபர் பிரபோவோ

1 mins read
6ce15129-6f69-4479-80e9-76d8d7bf7dd2
நவம்பர் 3ஆம் தேதி நெல் பயிரிடும் டிராக்டரை இயக்கிப் பார்த்த இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ, பாப்புவாவுக்கு பயணம் மேற்கொண்டு முக்கிய உணவுத் திட்டத்தை நேரில் பார்வையிட்டார்.

நாடு முழுவதும் மூன்று மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் உணவுத் தோட்டங்களை உருவாக்கும் முயற்சிகளில் இந்தோனீசிய அரசாங்கம் இறங்கியிருக்கிறது. இதன் முதல் கட்டமாக பாப்புவாவில் உணவுத் தோட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் உணவுக்கானத் தேவைகளில் நாடு தன்னிறைவைப் பெறும் என்று அதிபர் பிரபோவோ உறுதியளித்துள்ளார்.

உணவு விவசாயத் திட்டங்களால் ஏறக்குறைய 10 மில்லியன் டன் அளவுக்கு அரிசி அறுவடை செய்யப்படும் என்று பிரபோவோவின் ஆலோசகர் தெரிவித்தார்.

தெற்கு பாப்புவாவில் மெராக் வட்டாரத்தில் ஒரு மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் விவசாயத் தோட்டம் உருவாக்கப்படுகிறது.

இதைத்தான் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அப்போது நெல் பயிரிடும் சாதனத்தை அவர் இயக்கிப் பார்த்தார்.

எஞ்சிய விவசாய நிலங்கள் சுமத்ரா, கலிமந்தான் தீவில் அமைக்கப்படும் என்று ஆலோசகர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதில் உணவுத் திட்டங்கள் கவனம் செலுத்தும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

அரிசி, சக்கரை போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு வெளிநாடுகளை நம்பியிராமல் இருப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

குறிப்புச் சொற்கள்