ஜப்பானில் முன்கூட்டியே தேர்தல் வரலாம்: ஆளும் கூட்டணிக் கட்சியின் தலைவர்

2 mins read
272057ee-35bd-436c-84fe-dce244c68cd7
பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஊடகச் செய்தி வெளியானாலும் பிரதமர் சானே தக்காய்ச்சி அதுபற்றி எதனையும் தெரிவிக்கவில்லை. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியத்தை ஆளும் கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியின் தலைவர் உறுதிசெய்துள்ளார்.

ஜப்பானியப் புத்தாக்கக் கட்சியின் தலைவரான ஹிரோஃபுமி யோஷிமுரா இதுதொடர்பாக அரசாங்க ஊடகத்திடம் பேசினார்.

பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று வெளியான செய்தி குறித்துப் பேசிய அவர், அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் சானே தக்காய்ச்சி முடிவெடுத்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தாம் பிரதமரைச் சந்தித்துப் பேசியபோது தேர்தலை நடத்தும் காலநேரம் குறித்த அவரது கருத்தில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்ததாகத் திரு யோஷிமுரா குறிப்பிட்டார்.

தேர்தல் பிப்ரவரி 8 அல்லது 15ஆம் தேதியில் நடத்தப்படலாம் என்று வெள்ளிக்கிழமை ஒரு ஜப்பானிய நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அரசாங்கத் தரப்புகளை மேற்கோள் காட்டி அது அந்தத் தகவலைக் கூறியிருந்தது.

ஆயினும், பிரதமர் தக்காய்ச்சி தேர்தல் தேதி தொடர்பாக எந்த ஓர் ஆலோசனையையும் நடத்தவில்லை என்றார் திரு யோஷிமுரா.

ஊகங்கள் வெளிவந்தாலும் தேர்தல் பற்றி திருவாட்டி தக்காய்ச்சி இதுவரை வாய்திறக்கவில்லை. கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 8) அரசாங்கத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலும் அவர் அதுபற்றி எதையும் குறிப்பிடவில்லை. அந்த நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) ஒளிபரப்பானது.

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான திருவாட்டி தக்காய்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பொறுப்பில் அமர்ந்தார். தம்மீது மக்கள் கொண்டிருக்கும் வலுவான நம்பிக்கையை வாக்குகள் மூலம் அவர் பெற விரும்புவதாகக் கூறப்படுகிறது. சீனாவுடன் ஜப்பான் அரசதந்திர உரசலைச் சந்தித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஆதரவைப் பெறுவது அவசியம் என அவர் கருதுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2024ல் ஜப்பானிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகளுக்குமேல் கால அவகாசம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்