இவ்வாண்டு ஜூலை மாதம் உலகின் ஆக வெப்பமான ஜூலை மாதம்

2 mins read
a034a477-6ebb-4c25-aecd-d16ab8434be4
2024ஆம் ஆண்டு உலகின் ஆக அதிக வெப்பமுள்ள 5 ஆண்டுகளின் பட்டியலில் கட்டாயம் இடம்பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: இவ்வாண்டு ஜூலை மாதம் உலகின் ஆக வெப்பமான ஜூலை மாதம் என்று அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பான ‘என்ஓஏஏ’ செவ்வாய்க்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.

உலகில் கடந்த 14 மாதங்களாக வெப்பம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் 2024ஆம் ஆண்டு உலகின் ஆக வெப்பமிக்க ஆண்டாக மாறக்கூடிய சாத்தியம் 77 விழுக்காடு என்று சுற்றுச்சூழல் அமைப்பின் அதிகாரிகள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் அமைப்பான காப்பர்நிக்கசின் தரவுகள் வித்தியாசமான தகவலை தந்துள்ளன. இவ்வாண்டு ஜூலை மாதத்தின் சராசரி வெப்பநிலை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் சராசரியைவிட குறைவாகத்தான் உள்ளது என்று கூறுகிறது.

இருப்பினும் இரண்டு அமைப்புகளும் அதிகரித்துவரும் வெப்பநிலை குறித்து கவலை தெரிவித்தன. குறிப்பாக கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை அதிகரித்தது ஆபத்தானது என்றும் அவை கூறின.

அமெரிக்காவின் ‘என்ஓஏஏ’ அமைப்பிடம் 175 ஆண்டுகளுக்கான தரவுகள் உள்ளன. அதன்படி பார்த்தால் 2024ஆம் ஆண்டு உலகின் ஆக அதிக வெப்பமுள்ள 5 ஆண்டுகளின் பட்டியலில் கட்டாயம் இடம்பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டும் உலகின் ஆக அதிக வெப்பமுள்ள ஆண்டுகளில் ஒன்றாக உள்ளது.

ஜூலை மாதம் உலகின் சராசரி வெப்பநிலை 20ஆம் நூற்றாண்டில் பதிவான 15.8 டிகிரி செல்சியசை விட கூடுதலாக 1.21 டிகிரி செல்சியஸ் பதிவானது.

இவ்வாண்டு ஜூலை மாதம் மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பலமுறை வெப்ப அலைகள் பதிவாகின.

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளிலும் ஜூலை மாதம் கடுமையான வெப்பம் இருந்தது. வட அமெரிக்காவையும் வெப்பம் விட்டுவைக்கவில்லை.

கடல்களின் வெப்பநிலையும் கூடின. இவ்வாண்டு ஜூலை மாதம் கடல்களின் வெப்பநிலை ஆக வெப்பமிக்க இரண்டாவது ஜூலை மாதமாக பதிவானது.

குறிப்புச் சொற்கள்