காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 800 பேர் மாண்டுவிட்டதாகவும் 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டை ஆட்சி செய்யும் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை (செப்டம்பர் 1) அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆகப் பதிவானது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவலை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் திங்கட்கிழமை (செப்டம்பர் 1) வெளியிட்டது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
காயமடைந்தோர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரே கிராமத்தில் ஏறத்தாழ 30 பேர் மாண்டுவிட்டதாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சு கூறியது.
மாண்டோர் தொடர்பான துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“மாண்டோர், காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மீட்புப் பணியாளர்களால் சென்றடைய முடியவில்லை,” என்று சுகாதார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஷரஃபாட் ஸமான் தெரிவித்தார்.
குனார் மாநிலத்தில் மூன்று கிராமங்கள் நிலைகுலைந்துவிட்டதாகவும் அங்குள்ள பல வீடுகள் தரைமட்டமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“மீட்புப் பணிகளில் உதவி செய்யவோ அல்லது நிவாரணப் பணிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்கவோ எந்த ஒரு நாடும் முன்வரவில்லை,” என்று ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஏமாற்றம் தெரிவித்தார்.
நிலநடுக்க அபாயம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இந்து குஷ் மலைத்தொடர்களை ஒட்டிய பகுதிகளில் இந்திய, யூரேஷியத் தளத்தட்டுகள் மோதிக்கொள்ளும் இடத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றின் காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

