லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியை சனிக்கிழமை (நவம்பர் 28) உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் 5.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியது.
அதன் தாக்கத்தால் அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஒரு விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டது.
நிலநடுக்கமும் தொடர் நில அதிர்வுகளும் அந்நகரின் மான்ஹட்டன் கடற்கரைப் பகுதியை அதிகமாகப் பாதித்து, பல வீடுகளின் சன்னல்கள் உடைந்தன என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது.
கலிஃபோர்னிய ஆளுநர் அலுவலகத்தின் அவசரகாலச் சேவைப் பிரிவு, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சேதத்தை ஆராய்ந்து வருவதாக அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
நிலநடுக்கங்கள் கணிக்கப்பட முடியாதவை, எனவே தொடர் நில அதிர்வுகளை எதிர்பார்க்க வேண்டும் என்று அது பதிவிட்டது.
பல வாகனங்களின் அபாய ஒலிகள் நிலநடுக்கத்தால் தூண்டிவிடப்பட்டன. ஓடுபாதையில் பிளவுகள் ஏற்படும் அபாயத்தால் லாஸ் ஏஞ்சலிஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதை டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கைவிட்டு, மீண்டும் வானில் பறந்து சென்றது.
வானில் சுற்றி வட்டமிட்ட அவ்விமானம், 17 முதல் 30 நிமிடங்கள் கழித்து பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
ஓடுபாதைகள் சோதனையிடப்படாததால் அவ்வாறு விமானம் தரையிறங்குவதைத் தவிர்த்தது சரியானதே என்று அந்நகர மேயர் கேரன் பாஸ் ஊடகத்திடம் கூறினார்.
நிலநடுக்கத்தால் காயமடைந்தோரின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பல வீடுகளிலும் விமான நிலையத்திலும் அதிக அளவில் கண்ணாடிகள் உடைந்து பொருள்கள் அங்குமிங்கும் சிதறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் ஒரு சிலர் ஏதும் நடக்காததுபோல இருந்ததோடு சிலர் அழுததாகவும் வேறு சிலர் தரையில் படுத்துக்கொண்டதாகவும் கலிஃபோர்னிய ஆளுநரின் சமூக ஊடகப் பதிவுக்குக்கீழ் ஒருவர் கருத்துரைத்தார்.
மேலும் பல நில அதிர்வுகளுக்கு தயார்ப்படுத்திக்கொள்ளும்படி பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
நிலநடுக்கம் சார்ந்த பணிகளுக்குத் தயாராக உள்ளதாகவும் அதன்கீழ் இயங்கும் 100க்கும் அதிகமான தீயணைப்பு நிலையங்கள் நிலைமையை மதிப்பிட்டு வருவதாகவும் லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை தெரிவித்தது. நிலம், வான், கடல் சார்ந்த நகரின் முக்கிய உள்கட்டமைப்புகள் அவற்றில் அடங்கும்.
தற்போது கட்டமைப்புகளில் எவ்விதப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்பதோடு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதைத் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.
