கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தின் பாகோவில் உள்ள புக்கிட் கெபோங் என்ற பகுதியில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) காலை 8.55 மணியளவில் அதிர்வுகள் உணரப்பட்டன.
ஜோகூரின் செகமாட் பகுதியிலிருந்து தென்மேற்கில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அது மையம்கொண்டிருந்தது என்றும் வானிலை ஆய்வகம் குறிப்பிட்டது.
அதன் விளைவாக ஜோகூரிலும் மலாக்காவிலும் உள்ள பல வட்டாரங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.
நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிப்பதாய் வானிலை ஆய்வகம் சொன்னது.
இந்நிலையில், முவார் வட்டார அதிகாரி சைனால் இரான், பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறினார்.
அதிர்வுகளை உணர்ந்தவர்கள் அதிகாரிகளிடம் தகவல் அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் உயிருடற்சேதமோ பொருள் சேதமோ இல்லை என்று திரு சைனால் உறுதிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள் அமைதியாகவும் விழிப்பாகவும் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.
அண்மையில் செகமாட், பத்து பகாட் ஆகிய பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.

