துருக்கியில் நிலநடுக்கம்: ஒருவர் உயிரிழப்பு

1 mins read
9c3a0343-5d34-46c7-8a37-f07fbc2b9c2c
மொத்தம் 16 கட்டடங்கள் தரைமட்டமாயின.  - படம்: இந்திய ஊடகம்

இஸ்தான்புல்: வடமேற்குத் துருக்கியில் ‘சிந்திர்கி’ எனும் பகுதியில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

6.1 ரிக்டர் அளவிலான அந்த நிலநடுக்கத்தில், ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 16 கட்டடங்கள் தரைமட்டமானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவியும் இஸ்மிர் ஆகிய நகரங்கள் உட்பட துருக்கியின் மேற்கில் உள்ள பல முக்கிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக இருந்த ‘சிந்திர்கி’ நகரில் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 81 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நிலநடுக்கத்தால் ‘பாலிகேசிர்’ மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

அவற்றைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நாட்டில் உள்ள அனைத்து மீட்புக் குழுக்களும் உடனடியாகப் பணியில் அமர்த்தப்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்