கராக்கஸ்: வெனிசுவேலா தலைநகர் கராக்கஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர்; 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆயினும், நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் சிக்கிக்கொண்டதுடன், சக்திவாய்ந்த நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
தலைநகர் கராக்கசிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் 7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது நடந்த ஒரே நிமிடத்தில் மற்றொரு 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கியது. அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் நேரம் ஜூன் 25 இரவு 9.20 மணி நிலவரப்படி, குறைந்தது 164 பேர் மாண்டுவிட்டதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர், மாண்டோர் எண்ணிக்கை அதிக அளவு இருக்கும் என்று அஞ்சுகின்றனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்துவிட்டன.
அமெரிக்கப் புவியியல் ஆய்வக விஞ்ஞானிகள் (USGS) பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தில் மரணமடைந்திருக்கலாம் என்று கருத்துரைத்தனர். நாடு முழுவதும் நிலநடுக்கம் பாதித்துள்ளதால் 10,000 முதல் 100,000 பேர் வரையில் அதில் மாண்டிருக்கலாம் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
“கட்டடங்களும் வீடுகளும் இடிந்துள்ளன. எங்களால் முடிந்த அளவு பொதுக் கட்டமைப்புகளைக் கொண்டு செயலாற்றிவருகிறோம். அனைத்துக் காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகளும் உதவி வருகின்றனர்,” என்று வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடொ கபெலோ தேசியத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
இதனிடையே, வெனிசுவேலா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் கிரிஸ்தஃபர் லன்டாவ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
பேரிடர் உதவிக் குழு, அத்தியாவசியப் பொருள்களை வெனிசுவேலா மக்களுக்கு வழங்கும் சிறப்பு செயல்குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.
ஜப்பானிலும் நிலநடுக்கம்
இதனிடையே, ஜப்பானின் வடக்குப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 25) 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்நாட்டு வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அது கூறியது.
இவாத்தே நகருக்கு அருகில் 44 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டது.
தலைநகர் தோக்கியோ வரை நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.
இவாத்தே நகரில் இயங்கும் விரைவு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன; சில பள்ளிகள் மூடப்பட்டன.
அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக கியோடோ ஊடகம் தெரிவித்தது. ஒருசில இடங்களில் மின்தூக்கிகளில் சிக்கிக்கொண்டோரைத் தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளூர் ஆட்சியாளர்களுடன் அமைச்சர்களையும் அரசாங்க அமைப்புகளையும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டதாக ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி கூறினார்.

