ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புச் சேவை டிசம்பர் 12ல் தொடங்க இலக்கு

ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புச் சேவை டிசம்பர் 12ல் தொடங்க இலக்கு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 6:50 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புச் சேவை டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) ஆசியப் போக்குவரத்து எக்ஸ்போ 2026 தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.

சேவையின் முதல் மாதத்தில் சாதாரணப் போக்குவரத்து, விரைவுப் போக்குவரத்துப் பயணக் கட்டணங்களுக்கு 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். பயணச்சீட்டு விற்பனை நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

“தற்போதுள்ள கட்டணச் சலுகைகளைப் பெறத் தகுதிபெறாதவர்களுக்கு இந்த அறிமுகச் சலுகைத் தள்ளுபடி பொருந்தும். உடற்குறையுள்ளோர், இரண்டு முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மூத்தோர், மாணவர்கள் ஆகிய பயணிகள் நிரந்தர 50 விழுக்காடு கட்டணச் சலுகையைத் தொடர்ந்து பெறுவர்,” என்று அமைச்சர் லோக் கூறினார்.

பயணிகள் சேவையோடு சேர்ந்தே சரக்குப் போக்குவரத்தும் தொடங்கப்படும் என்றும் இதன் மூலம் பயணிகள், சரக்கு ஆகிய இரு தேவைகளையும் இந்த ரயில் சேவை பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோத்தா பாருவிலிருந்து மலேசிய-தாய்லாந்து எல்லையை அடையும் வகையில் ரந்தாவ் பாஞ்சாங் வரை 32 கிலோமீட்டர் தூரத்துக்குச் செய்யப்பட்டுள்ள விரிவாக்கப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

உரிமை பெற்ற முனையங்களில் மட்டுமே பேருந்து பயணச் சீட்டு விற்பனை

உரிமம் பெற்ற முனையங்கள் வழியாக மட்டுமே பேருந்து பயணச்சீட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையானது, இணையவழி பயணச்சீட்டு முகவர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்று அமைச்சர் லோக் தெளிவுபடுத்தினார்.

பேருந்து நிறுவன உரிமையாளர்கள் இக்கொள்கையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், இது குறித்து விளக்குவதற்கு அவர்களுடன் தனியாகக் கலந்தாலோசனை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேருந்து உரிமையாளர்களுக்கு இதனால் எவ்வித நிதி இழப்பும் ஏற்படக்கூடாது என்றும், அதே நேரத்தில் முனையங்கள் தங்களின் தற்போதைய கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்பதும் உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

கம்பி வடத் திருட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புப் பாதையை நடத்தும் நிறுவனம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து நிறுவனங்களைப் பாதிக்கும் கம்பிவடத் திருட்டுச் சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் தண்டனைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து மலேசியப் போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபோக்குவரத்துரயில்