கொழும்பு: இலங்கை உயர் நீதிமன்றம் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலில் நேரடியாய் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட 15 ஆடவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அந்தத் தாக்குதலில், 279 பேர் உயிரிழந்தனர்.
கொலை, பயங்கரவாதச் சதித் திட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் துப்பாக்கிகள், வெடிபொருள்களை வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றம்சாட்டப்பட்ட 14 பேர் குற்றவாளிகள் என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
15வது நபர் சில குற்றச்சாட்டுகளில் மட்டுமே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற ஒன்பது பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் அனைத்துச் சொத்துகளையும் மற்ற உடைமைகளையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி, மூன்று சொகுசு ஹோட்டல்கள், மூன்று தேவாலயங்கள் ஆகியவற்றின்மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் அவர்களுக்கு உதவியதாகவும் அந்த ஆடவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அந்தத் தெற்காசிய நாட்டின் வரலாற்றிலேயே பொதுமக்கள்மீது நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் அது எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் ஊகித்திருந்தன. இருப்பினும், இலங்கையில் 1976ஆம் ஆண்டிற்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை என்பதால், மரண தண்டனை வழக்கமாக ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை, இலங்கையின் ரோமன் கத்தோலிக்க ஆலயம் வரவேற்றுள்ளது.
“இறுதியாக, நமக்கு நீதி கிடைத்துள்ளது,” என்று கத்தோலிக்கப் பாதிரியார் ஜூட் ஃபெர்னாண்டோ, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
