“வீட்டிலிருந்தபடியே வேலை செய்து நாளொன்றுக்கு 500 வெள்ளி சம்பாதிக்கலாம்.”
“இணையத்தில் சில எளிய பணிகளைச் செய்து உடனடியாகப் பணம் பெறுங்கள்.”
“பகுதிநேர வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.”
இதுபோன்ற செய்திகள் பலரைக் கவரக்கூடும். குறிப்பாக, முன் அனுபவம் தேவையில்லை, வேலை மிகவும் எளிதானது என்று கூறும்போது, அந்த வாய்ப்பு மேலும் கவர்ச்சியாகத் தோன்றலாம்.
ஆனால், வாட்ஸ்அப், டெலிகிராம், குறுஞ்செய்தி அல்லது சமூக ஊடகங்கள் வழியாக எதிர்பாராத விதமாக வரும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளைக் கவனமாக ஆராய்வது அவசியம்.
அது ஒரு வேலைவாய்ப்பு மோசடியின் தொடக்கமாக இருக்கலாம்.
வேலை செய்வதற்கு நீங்களே பணம் செலுத்த வேண்டுமா?
சில இணையவழிப் பணி மோசடிகள் ஆரம்பத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தாத வகையில் தொடங்குகின்றன.
சமூக ஊடகப் பதிவுகளுக்கு விருப்பக்குறி இடுவது, குறிப்பிட்ட கணக்குகளைப் பின்தொடர்வது, பொருள்களுக்கு மதிப்புரை வழங்குவது அல்லது இணையத்தில் சில ஆர்டர்களை நிறைவேற்றுவது போன்ற எளிய பணிகளைச் செய்யுமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
ஆரம்பத்தில், மோசடிக்காரர்கள் உங்களுக்குச் சிறிய தொகையைக்கூட வழங்கலாம்.
இதுதான் முக்கியமான கட்டம். முதல் முறையாகப் பணம் கிடைத்தவுடன், அந்த வேலை உண்மையானது என்ற நம்பிக்கை ஏற்படலாம்.
அதன்பிறகு, அதிகத் தரகுத்தொகை கிடைக்கும் என்று கூறி, கூடுதல் மதிப்புள்ள பணிகளைச் செய்யுமாறு அழைக்கப்படலாம்.
ஆனால், அதில்தான் மோசடி மறைந்திருக்கிறது.
அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன்பு, உங்கள் சொந்தப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று கூறப்படலாம்.
நீங்கள் செலுத்தும் தொகை அதிகரிக்கும்போது, சம்பாதித்ததாகக் கூறப்படும் பணமும் இணையத்தளம் அல்லது செயலியில் அதிகரித்துக் கொண்டிருப்பது போலக் காட்டப்படலாம்.
ஆனால், அந்தப் பணத்தை எடுக்க முயற்சி செய்யும்போது, கட்டணம், வரி, கணக்கு மேம்பாடு அல்லது அடையாளச் சரிபார்ப்பு என்ற பெயரில் மீண்டும் பணம் செலுத்துமாறு கேட்கப்படலாம்.
உங்கள் திரையில் காட்டப்படும் தொகை பெரிதாக இருக்கலாம்.
ஆனால், அந்தப் பணம் உண்மையில் இருக்கிறது என்று அர்த்தமல்ல.
வேலை வழங்கும் நிறுவனத்தை நீங்களே சரிபாருங்கள்
எதிர்பாராத விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு கிடைத்தால், அந்தச் செய்தியில் வழங்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களை மட்டும் நம்பாதீர்கள்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நீங்களே தேடிக் கண்டறிந்து, அதன் அதிகாரபூர்வத் தொடர்பு வழியாக நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.
வழக்கமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்ற மறுக்கும் நபர்கள், குறுஞ்செய்திச் செயலிகள் மூலம் மட்டுமே தொடர்புகொள்ளும் ஆட்சேர்ப்பாளர்கள் அல்லது மிகக் குறைந்த வேலைக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
மிக முக்கியமாக, சம்பளம் அல்லது தரகுத்தொகை பெறுவதற்காக உங்கள் சொந்தப் பணத்தை மீண்டும் மீண்டும் செலுத்த வேண்டிய வேலைவாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்புங்கள்.
அறிமுகமில்லாத ஆட்சேர்ப்பாளர்களிடம் உங்கள் Singpass உள்நுழைவுத் தகவல்கள், வங்கிக் கடவுச்சொற்கள் அல்லது பிற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் வழங்காதீர்கள்.
ஏதேனும் செய்தி, தொலைபேசி எண் அல்லது இணைய இணைப்பு சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், கூடுதல் சரிபார்ப்புக்கு ScamShield செயலியையும் பயன்படுத்தலாம்.
அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டியதில்லை
ஒரு வேலைவாய்ப்பு அல்லது அதிக வருமானம் தரும் பணி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று மோசடிக்காரர்கள் கூறலாம்.
ஆனால், உண்மையான வேலைவாய்ப்பு என்றால், அதைப் பற்றி நியாயமான முறையில் விசாரித்துச் சரிபார்க்க உங்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும்.
எதிர்பாராத விதமாக வரும் இணைய வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, உங்களையே இந்த மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
⦁ நான் உண்மையில் யாருடன் தொடர்புகொள்கிறேன்?
⦁ இந்த நிறுவனத்தை என்னால் தனியாகச் சரிபார்க்க முடியுமா?
⦁ பணம் சம்பாதிப்பதற்கு நான் ஏன் முதலில் பணம் செலுத்த வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் கிடைக்காவிட்டால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
இந்த வார மின்னிலக்கப் பாதுகாப்புக் குறிப்பு
ஆரம்பத்தில் சிறிய தொகை கிடைத்துவிட்டது என்பதற்காக மட்டும் ஓர் இணைய வேலைவாய்ப்பு உண்மையானது என்று நம்பிவிடாதீர்கள்.
வேலை உங்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டும். அந்த வேலையே உங்களிடம் மீண்டும் மீண்டும் பணம் கேட்டால், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
