கின்ஷசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய நோய்ப்பரவலில் இதுவரை 3,075 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 1,354 பேர் உயிரிழந்துவிட்டனர். 556 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 755 நோயாளிகள் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தல் மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது இபோலா நோய்ப்பரவல் இடூரி, வடக்கு கிவு, தெற்கு கிவு, ஹாட்-உவேலே, சோபோ ஆகிய ஐந்து மாநிலங்களைப் பாதித்துள்ளது.
இதனிடையே, தற்போதைய நோய்ப்பரவலுக்குக் காரணமான ‘புண்டிபுக்யோ இபோலா’ கிருமி ரகத்திற்கு எதிரான தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறையைக் கண்டறியும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டுப் பிரதமர் ஜூடித் சுமின்வா துலுகா தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு முதல் நான்கு மாதங்களுக்குள் தடுப்பூசியும் சிகிச்சையும் கிடைக்கப் பெறலாம் என நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த ஆராய்ச்சிப் பணிகளுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது ‘புண்டிபுக்யோ இபோலா’ கிருமி ரகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ தனிப்பட்ட சிகிச்சையோ இல்லை. இருப்பினும், பல சோதனைமுறைத் தடுப்பூசிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ‘புண்டிபுக்யோ இபோலா’ கிருமியிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'ChAdOx1 BDBV' என்ற தடுப்பூசியை முதன்முதலில் மனிதர்களிடம் சோதிக்கும் நடவடிக்கையில், முதற்கட்டமாக ஒரு தன்னார்வலருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

