இபோலா உயிரிழப்பு இரட்டிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இபோலா உயிரிழப்பு இரட்டிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

2 mins read
இதுவரை கையாண்டதில் இபோலா தொற்றே அதிவேகமாகப் பரவும் நோய்
7459f631-b22f-4903-9ea9-11776a65baea
காங்கோவின் ருவம்பாரா எனும் பகுதியில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர். - படம்: ஏஎஃப்பி

கின்ஷாசா: ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக் குடியரசில் கடந்த இரு வாரங்களில் இபோலா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் எண்ணிக்கை இரட்டிப்பானது.

நோய் தொற்றிய பலருக்கு மருத்துவ உதவிகள் சென்றடையவில்லை எனக் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பு (WHO), இதுவரை கையாண்ட தொற்று நோய்களில் இபோலா தொற்றே அதிவேகமாகப் பரவிவரும் ஒன்று என எச்சரித்தது.

இதுவரை 2,011 நோயாளிகளுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 754 மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டன என்று காங்கோவின் தேசிய பொதுச் சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) அறிவித்தது.

ஜூன் மாதம் பதிவான 377 மரணங்களை ஒப்பிடுகையில் தற்போதைய மரண எண்ணிக்கை இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இத்துரி மாநிலத்தில் மையம் கொண்டருந்த இபோலா, தற்போது மேலும் இரு மாநிலங்களுக்கும் பரவி, அங்கு புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 2018ல் காங்கோவில் பரவி, ஈராண்டுகள் நீடித்த தொற்றைவிட தற்போது மிகுதியாகப் பலரை இபோலா அந்நாட்டில் பாதித்துள்ளது.

இதனை எல்லைகளற்ற மருத்துவர்கள் குழு வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

மருத்துவ அதிகாரிகளின் தொடர்பில் உள்ளோரையும் கடந்து இம்முறை 80 விழுக்காட்டு புதிய தொற்று பாதிப்பு நிகழ வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தற்போதைய நிலவரப்படி, இரண்டு முதல் நான்கு மடங்கு அறிவிக்கப்படாத நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால மருத்துவத் திட்டச் செயற்குழுவின் இயக்குநர் சிக்குவே இஹெகுவே ஆசூ செய்தியாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.

தொற்றினால் ஏற்படும் மரணங்களின் ஒரு வாரத்துக்கான விழுக்காடு கடந்த வாரம் இருந்த 32லிருந்து இவ்வாரம் 37ஆக உயர்ந்தது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

தொற்றின் தீவிரத்தைவிட, அதனை உடனடியாகக் கண்டறிதல், நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பை வழங்குதல் ஆகியவற்றில் ஏற்படும் தாமதம் மரண எண்ணிக்கை கூடுவதற்கான காரணங்கள் என்று அந்நிறுவனம் விளக்கியது.

குறிப்புச் சொற்கள்
இபோலாநோய்ப்பரவல்தொற்றுநோய்உலக சுகாதார நிறுவனம்மருத்துவர்காங்கோமருத்துவம்