இபோலா: சோதனைகளைத் தீவிரப்படுத்தும் மலேசியா

இபோலா: சோதனைகளைத் தீவிரப்படுத்தும் மலேசியா

2 mins read
சிங்கப்பூர் வழியாக வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவர்
0d6554ed-882b-46af-92f4-38dce3c76241
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா தொற்றால் இதுவரை 80 பேர் மாண்டுவிட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: இபோலா நோய்த்தொற்றுப் பரவலையடுத்து மலேசியச் சுகாதார அமைச்சு கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ ஜனநாயகக் குடியரசிலும் உகாண்டாவிலும் ‘பந்திபுகியோ’ இபோலா கிருமித்திரிபு பரவி வருகிறது. இதனை ‘அனைத்துலகப் பொதுச் சுகாதார அவசரநிலை’யாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசியாவில் இதுவரை இபோலா பாதிப்பு பதிவாகவில்லை. இருப்பினும், அதனை எதிர்கொள்வதற்கான தனது ஆயத்த நடவடிக்கைகளை மலேசியா தீவிரப்படுத்தி வருகிறது.

“எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் எங்களது தயார்நிலையையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம். உகாண்டா, காங்கோ நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வரும் பயணிகளைக் கண்காணித்து வருகிறோம். சிங்கப்பூர், துபாய், தோஹா உள்ளிட்ட அனைத்துலக விமான நிலையங்களில் இறங்கி, வேறு விமானங்கள் வழியாக மலேசியா வருவோரும் அவர்களில் அடங்குவர்,” என்று சுகாதார அமைச்சு புதன்கிழமை (மே 20) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.

தற்போது உகாண்டா, காங்கோ நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமானங்கள் எதுவும் இல்லை.

பொதுச் சுகாதார இடர்களை மதிப்பிடவும் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தவும் ஏதுவாகக் கண்காணிப்பு, பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வகையில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்து அனைத்துலக நுழைவுப்பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

உலகச் சுகாதார நிறுவனம், மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்பு அமைப்பு, விமான நிறுவனங்கள் மற்றும் உரிய பிற அமைப்புகளுடன் ஒத்துழைப்பையும் அனைத்துலக இடர் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அமைச்சு வலுப்படுத்தி வருகிறது.

பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பியோர் 21 நாள்களுக்குள் காய்ச்சல், தலைவலி, தசைவலி, களைப்பு, வாந்தி, ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உலகச் சுகாதார நிறுவனத் தரவுகளின்படி, மே 16ஆம் தேதிவரை காங்கோவின் இட்டூரி மாநிலத்தில் கிட்டத்தட்ட 80 பேர் இபோலாவால் மாண்டுவிட்டனர். அங்கு எட்டுப் பேர்க்கு இபோலா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; கிட்டத்தட்ட 250 பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றனர்.

உகாண்டாவில் இபோலாவால் ஒருவர் உயிரிழந்துவிட்டார், இன்னொருவர்க்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்