இபோலா தொற்றால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; வன்முறையால் முடங்கிய மீட்புப் பணிகள்

இபோலா தொற்றால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; வன்முறையால் முடங்கிய மீட்புப் பணிகள்

2 mins read
0a6d0464-b954-4974-b77e-dab29cd60462
காங்கோவில் இபோலா பரவலைக் கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புனியா நகரின் முதன்மை மருத்துவமனையில் நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. - படம்: நியூயார்க் டைம்ஸ்

கின்ஷாசா: காங்கோவில் இபோலா கிருமிப் பரவலால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கிழக்குப் பகுதியில் இருக்கும் மூன்று மாநிலங்களில் உள்ள 11 சுகாதார வட்டாரங்களில் 900க்கும் அதிகமானோருக்கு இபோலா தொற்றும் இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக மே 24ஆம் தேதி அந்நாட்டுச் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம், பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பு, சிகிச்சை நிலையங்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இடையே இபோலா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

இபோலோ நோய் பாதிக்கப்பட்டோரோடு தொடர்பில் இருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களில் 20 விழுக்காட்டினரை மட்டுமே ஒரு நாளில் சுகாதார ஊழியர்களால் தொடர்ந்து கண்காணிக்க முடிவதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வன்முறை காரணமாகப் பொதுமக்களும் சுகாதார, மனிதநேய ஊழியர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு வெளியேறி வருவதாக உலகச் சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் மே 24ஆம் தேதி சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

இதனால், நோய்த்தொற்றைக் கண்டறிந்து தொடக்கத்திலேயே சிகிச்சையளிக்கும் முயற்சிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மே 24ஆம் தேதி, மோங்ப்வாலு வட்டாரத்தில் இபோலா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளித்துவரும் மருத்துவமனைக்குள் குடியிருப்பாளர்கள் சிலர் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிருமித் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்கிற்காக ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்ததைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்தது.

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற வட்டார சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில், எல்லை தாண்டிய மக்கள் நடமாட்டத்தால் அண்டை நாடுகளுக்கும் இபோலா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டது. தற்போது ஆப்பிரிக்காவின் பத்து நாடுகள் இந்தத் தொற்றுப் பரவல் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
காங்கோஇபோலாஉயிரிழப்பு